இரகசிய உறவில் இருந்த ஓபிஎஸ், தினகரன் இருவரும் தற்போது வெளி உறவில் உள்ளனர் - கடம்பூர் ராஜூ விமர்சனம்
இரகசிய உறவில் இருந்த ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தற்போது வெளி உறவில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு உள்ள அண்ணா சிலை அருகே முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு எடுத்து பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து நீதிமன்றங்களிலும் ஈபிஸ் தான் பொது செயலாளர், ஓபிஎஸ் நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற இறுதி தீர்ப்பு இன்று வந்துள்ளது. தர்மம் மற்றும் நியாயத்தின் பக்கம் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.
ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தினார்கள் - ஆளுநர் ரவி பேச்சு
எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் தான் அதிமுக என்று சொல்லிக் கொள்ளும் அருகதை உடையவர்கள், தகுதி உள்ளவர்கள் என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகி உள்ளது. ஓ.பி.எஸ். தனிகட்சி தொடங்கினாலும், வேறு வேலைக்கு சென்றாலும் பரவா இல்லை. அதிமுகவில் இனி ஓபிஎஸ் இணைக்க வாய்ப்பே இல்லை என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார்.
ஓ.பி.எஸ் - தினகரன் இருவரும் இணைந்து தான் இருந்தார்கள். ஓபிஎஸ்- தினகரன் இருவரும் கள்ள உறவில் இருந்தவர்கள், தற்போது வெளி உறவில் உள்ளனர். ஓபிஎஸ் தவிர அவருடன் இருப்பவர்கள் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். ஓபிஎஸ் உடன் ஒரு சதவீதம் பேர் இருந்தனர். அதில் முக்கால் வாசிபேர் அதிமுகவில் இணைந்து விட்டனர். அதை போன்று திமுகவில் இருந்தும் தினந்தோறும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
திமுகவில் உள்ள முதல்வரிடம் 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இது தான் திமுகவின் நிலை. மதுரை எழுச்சி மாநாட்டிற்கு பின்னர் தமிழகத்தில் நம்பர் 1 இயக்கமாக அதிமுக வெற்றி நடைபோடுகிறது. மதுரைக்கும் - அதிமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுரை மாநாடு மூலமாக தேசிய அளவில் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவாகியுள்ளார். பட்டங்கள் வாங்கும் போது விமர்சனங்கள் வருவது இயற்கை தான்.
காலை உணவுத்திட்டத்தால் அரசுப்பள்ளிகளில் 40% மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது - உதயநிதி தகவல்
எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை கட்சியினர் வழங்கவில்லை. தமிழகத்தை காக்க வேண்டும், விடியல் தருவேன் என்று ஏமாற்றத்தை தந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று சொல்லி மும்மதத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கி உள்ளனர். அதனை ஏற்றுக் கொள்வது அதிமுக தொண்டர்களின் விருப்பம். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கொடநாடு வழக்கினை மீண்டும் இந்த அரசு விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ விசாரித்தால் கூட எங்களுக்கு கவலை இல்லை என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துவிட்டதாக கூறினார்.