எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை வெறும் அரசியல் குற்றச்சாட்டு மட்டுமல்லாது, தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த ஒரு எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் சமீபத்திய திருநெல்வேலி விவசாயி படுகொலைச் சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள கடுமையான விமர்சனங்களை மையமாகக் கொண்டு எக்ஸ்தளத்தில் பகிர்ந்துள்ளார். திமுக அரசை நோக்கி வைத்துள்ள விமர்சனங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
"கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், முதல்வராக இருந்த ஸ்டாலின் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!
எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன். திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான். இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது, அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம். ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது.
விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே?
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி. இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம். தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது!
நான் கேட்கப்போவது, உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி. தமிழகம் வாழ வேண்டும் என்றால், திமுக வீழ வேண்டும். செய்வீர்களா?'' என கேட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை வெறும் அரசியல் குற்றச்சாட்டு மட்டுமல்லாது, தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த ஒரு எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றவாளிகள் மீதான கடும் நடவடிக்கை என்பதே ஒரு நல்ல அரசுக்கு இலக்கணம். அந்த இலக்கணத்தில் திமுக அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் வாதங்கள், வரும் தேர்தலில் முக்கியப் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

