அரசியல் கோமாளியே, தெர்மாகோல் விஞ்ஞானியே.! செல்லூர் ராஜூவை கண்டித்து பாஜகவின் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை
அதிமுக- பாஜக இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை விமர்சித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக- பாஜக மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி எதிர்கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியே கிடைத்தது. இந்தநிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு தரப்பிற்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என அண்ணாமலை கடந்த வாரம் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்திற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தமிழக பாஜக கட்டுப்பாடு இல்லாத இயக்கம், மாநில தலைமை பொறுத்தவரை ஒரு பொம்மை மட்டுமே அந்த பொம்மையை எங்கு வேண்டும் என்றாலும் எடுத்து வைக்கலாம்.
செல்லூருக்கு எதிராக பாஜக போஸ்டர்
தமிழக பாஜக தலைவர் என்பவர் நிரந்திர தலைவர் இல்லை, பொம்மை போன்று தான், ராஜாவாகவும் வைக்கலாம் பொம்மையாகவும் வைக்கலாம். ஆண்டவனே தடுத்தாலும் ஜெயலலிதாவை பழித்தவர்களை நாங்கள் விட மாட்டோம் என செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த செல்லூர் ராஜுவை கண்டித்து மதுரை கிழக்கு மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு சார்பாக மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் செல்லூர் ராஜுவை அரசியல் கோமாளியே தெர்மாகோல் விஞ்ஞானியே என விமர்சித்து பாஜகவின் வன்மையாக கண்டங்கள் என அச்சடிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு எதிராக பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்