வெறும் '6' நிமிட வாக்கிங் போதும்.. உங்க உடம்ப பத்தி ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!!
6 Minute Walk Test : சுமார் 6 நிமிடத்தில் ஒருவர் நடக்கும் தொலைவை கொண்டு அவரது உடலின் திறனை எவ்வாறு கணிக்கலாம் என இங்கு காணலாம்.
வெறும் 6 நிமிடத்தில் கடினமான அல்லது சமமான பரப்பில் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை கொண்டு நம் உடலின் ஆற்றலை கணக்கிடலாம். இதன் அடிப்படையில் இதயம், நுரையீரல் ஆகியவற்றின் ஆரோக்கிய நிலைகளை கூட கணிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சோதனையில் ஒட்டுமொத்த உடல் தகுதியையும், சகிப்புத்தன்மையையும் கண்டறியலாம். வயதானவர்களுக்கும், ஏதேனும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களும் உடல் ஆற்றலை தெரிந்து கொள்ள இதை முயன்று பார்க்கலாம்.
வயதுக்கு ஏற்றபடி மாறுமா?
60 வயதுக்குள் காணப்படும் ஒருவர் வேகமாக நடந்தால் ஆறு நிமிடங்களில் 400 முதல் 700 மீட்டர் வரை நடக்கலாம். ஆனால் வயது முதிர்ந்தவர்கள், உடல்நல கோளாறு இருப்பவர்கள் குறைவான தூரம் நடப்பார்கள். இளம் வயதினர், ஆண்கள் அதிக தூரம் நடப்பார்கள். அதிக உடல் எடையுள்ளோர், உயரம் குறைவானவர்கள் குறைவான தூரம் தான் நடக்க வாய்ப்புள்ளது.
இந்த '6' நிமிட வாக்கிங் சோதனையை செய்வதன் மூலம் இதய செயலிழப்பு அல்லது மற்ற இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியும். ஒருவர் மிக குறைந்த தூரம் நடந்தால், நடக்கும்போது இதய துடிப்பில் அசாதாரண மாற்றம் இருந்தால் அவருடைய இதய செயல்பாடு மோசமாக இருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு நாள்பட்ட நுரையீரல் நோய் இருப்பதை இந்த சோதனை வெளிப்படுத்தும். நுரையீரல் ஃபைப்ரோஸிஸ், நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி) போன்ற சுவாசக் கோளாறுகள் இருந்தால் இந்த சோதனையில் தெரியவரும். கொஞ்ச தூரம் நடக்கும்போதே சுவாசக் கோளாறு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் படிங்க: தினமும் தூங்கும் முன் 'வாக்கிங்'.. யாரும் அறியாத பயனுள்ள '10' நன்மைகள்!!
குறுகிய தூரம் நடந்தால்..
உடலில் ஏதேனும் நோய்கள் இல்லாத நபர் ஆறு நிமிடத்தில் குறைவான தூரத்தையே கடந்திருந்தால் அவருடைய உடல் திறன் குறைவாக உள்ளதை குறிக்கிறது. அவரது தசைகளின் பலவீனம், சோர்வை இது வெளிப்படுத்துகிறது. தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, நடப்பது என அவர்கள் உடற்செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் உடல் வலுப்பெறும். அப்போது அவர் ஆரோக்கியமான உடல் திறனையும், ஆற்றலையும் பெறுவார்.
6 நிமிட வாக்கிங் சிறுநீரக நோய், புற்றுநோய், நீரிழிவு ஆகிய நாள்பட்ட நோய் பாதிப்புள்ளவர்களின் திறனை அறிய நல்ல சோதனையாகும். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை கணிக்க இச்சோதனை உதவும். ஒரு நோயாளியால் 6 நிமிடத்தில் அதிக தூரம் நடக்க முடிந்தால் அவர்கள் நீண்ட கால ஆரோக்கிய விளைவுகளை பெற வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதையும் படிங்க: இரவு சாப்பிட்ட பின் 10 நிமிட 'குறுநடை'.. இந்த '9' நன்மைகள் கிடைக்கும்!!
யாருக்கு இந்த முறை பயன்படுகிறது?
ஒருவரின் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, அறுவைசிகிச்சை முடிந்த பின் அல்லது கீமோதெரபி செய்தவர்கள் இந்த சோதனையை செய்து உடலின் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக '6' நிமிட வாக்கிங் சோதனையை நோயாளிகளிடம் மருத்துவர்கள் சோதித்து பார்க்கின்றனர். சுமார் 30 மீட்டர் நீளம் கொண்ட பரப்பில் நோயாளியின் ஆற்றலுக்கு ஏற்றபடி 6 நிமிடங்கள் நடக்க வேண்டும். இதற்கிடையே நின்று கொள்வது, மெதுவாக நடப்பது என நோயாளி அவருக்கு ஏற்றார் போல நடக்கலாம். ஆனால் விரைவாக நடக்க முயற்சி செய்வது நல்லது. இப்படி நடந்த பின்னர் அந்த முடிவுகளை, சாதாரணமாக நடப்பதுடன் ஒப்பிட்டு உடலின் திறனை அளவிடுகிறார்கள். நடக்கும் தூரம், வேகம் ஒருவரின் வயது, பாலினம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வேறுபடலாம்.