மாட்டுக்கு வைக்கும் உணவை உண்டார் என் அப்பா..! 

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வாங்கிக் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது அவரை மீறி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார் இந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

தங்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்து பேசும் போது, "நான் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக என்னுடைய தந்தை மாட்டுக்கு வைக்கும் உணவை கூட சாப்பிட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் என் அப்பா உயிரோடு இருந்திருந்தால், என் வெற்றியை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என சொல்லு போதே கதறி அழுது விட்டார் சாதனை  பெண்மணியான கோமதி மாரிமுத்து. 

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800  மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்து இன்று ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு கண்ணீர் சிந்தியபடி தன்னுடைய வெற்றியைப் பற்றி பகிர்ந்து கொண்ட விதத்தை பார்த்து மற்றவர்களின் கண்களும் கலங்கியது.

விளையாட்டில் சாதிக்க அடித்தளமாக இருக்கக்கூடியது மைதானம். ஆனால் கோமதி மாரிமுத்துவுக்கு போதுமான அளவிற்கு பயிற்சி பெற வாய்ப்பில்லாமல் பல இக்கட்டான சூழ்நிலைக்கு நடுவே அவருடைய முழுமையான, வெறித்தனமான, நம்பிக்கையான முயற்சியின் விளைவாகத்தான் இன்று ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.

இவருடைய திறமைக்கு தமிழகமே தலைவணங்கி பாராட்டு தெரிவித்து வருகிறது. இவரால் இந்தியா பெருமை கொள்கிறது. திருச்சியில் வறுமையான சூழ்நிலையில் சாதாரண குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் கோமதி மாரிமுத்து அவருடைய திறமையால் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பதில் பெருமை கொள்வோம்.

எத்தனையோ கஷ்டங்களுக்கு பின், கோமதி மாரிமுத்துவின் வெற்றி இன்று நம் அனைவரையும் அறிய வைத்துள்ளது. இது போன்று இன்னும் எத்தனையோ கோமதி மாரிமுத்து இருக்கிறார்கள். அவர்களுடைய திறமையையும் ஒருநாள் வெளிவர வேண்டும். அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அரசு வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.