எக்கோஸ் முட்டைகள் குறித்த சர்ச்சையின் முழுவிளக்கத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
முட்டை பலரும் விரும்பி ஒரு சூப்பர் ஃபுட். உடல் ஆரோக்கியத்திற்கும், தசை வளர்ச்சிக்கும் உதவக் கூடிய புரதச் சத்துக்களை கொண்டுள்ளது. இது மலிவாகக் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துகளின் ஆதாரம். இப்போது முட்டைகள் கூட ஆரோக்கியத்திற்கு கேடு என சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில் முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாகும் என்ற கருத்து மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. அதாவது Trustified என்ற youtube சேனல் (உணவு தர சோதனைகளுக்கு பெயர் பெற்றது) சமீபத்தில் Eggoz முட்டைகள் புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறி வருகின்றனர். எனவே, எக்கோஸ் முட்டை சர்ச்சை குறித்த முழுவிளக்கத்தை இப்போது இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Eggoz முட்டை குறித்த சர்ச்சை..
Eggoz முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரானில் இருந்து பெறப்பட்ட AOZ என்ற கலவை இருப்பதாகக் கூறி Trustified என்ற youtube சேனல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நைட்ரோஃபுரான்கள் என்பது ஒருவித நச்சுப்பொருள். இது டிஎன்ஏ-வை சேதப்படுத்தும். மேலும் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்க செய்யும். Eggoz முட்டையை பரிசோதிக்கும்போது அதில் ஒரு கிலோவிற்கு 0.74 மைக்ரோ கிராம் AOZ இருப்பதாக அந்த youtube சேனல் குற்றஞ்சாட்டுகிறது.
Eggoz சொல்லுவது என்ன?
இதுகுறித்து எக்கோஸ் என்ற நிறுவனம் பதில் அளித்துள்ளது. தங்களது முட்டைகள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தர நிலைகளுக்கு உட்பட்டு இயங்குவதாகவும், தீவனம் முதல் விநியோகம் வரை கடுமையான செயல்முறைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
Eggoz என்றால் என்ன?
Eggoz என்பது இந்தியாவில் பிரபலமாக இயங்கி வரும் "பிராண்டட் முட்டை" நிறுவனம் ஆகும். இது மூலிகை தீவனம், உயர் சுகாதாரத் தர நிலைகள் ஆகியவற்றைக் கொண்டு பிரீமியம் முட்டைகளைத் தயாரிப்பதாக கூறுகிறது. மக்கள் Eggoz முட்டைகளை அதிக விலைக்கு கூட வாங்க தயங்குவதில்லை.
முட்டைகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை என்பதற்கு இதுவரை வலுவான எந்த ஆதாரங்களும் இல்லை எந்த ஆய்வுகளும் அதை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

