ரோஹித் சர்மா ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன். 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோஹித் சர்மா, கேப்டனான முதல் சீசனிலேயே மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின்னர் 2015, 2017 மற்றும் 2019 ஆகிய சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸுக்கு ஐபிஎல் டைட்டிலை வென்றுகொடுத்தார். 

ரோஹித் சர்மா இதுவரை 7 சீசன்களில் கேப்டன்சி செய்து, அதில் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்வதுடன், தனது அணியை ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாகவும் வைத்துள்ளார். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, 5வது முறையாக ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளது. 

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, அந்த அணிக்கு ஒரேயொரு முறை கோப்பையை வென்றுகொடுக்கவே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், தோனியை விட ஒருமுறை கூடுதலாக ஐபிஎல் டைட்டிலை வென்று சாதித்துள்ளார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மாவின் நிதானமான அணுகுமுறை, தெளிவான சிந்தனை, இக்கட்டான நேரத்தில் அவர் எடுக்கும் சிறந்த முடிவுகள் ஆகியவை தான் அவர் கேப்டன்சியில் சாதிக்க காரணம். 

இந்நிலையில், ரோஹித் சர்மாவை மிகவும் நெருக்கமாக இருந்து கவனித்துவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஜாகீர் கானிடம், டுவிட்டரில் ரசிகர் ஒருவர், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி தரங்கள் மற்றும் சிறப்புகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்த ஜாகீர் கான்,  ரோஹித்தின் கேப்டன்சி தரங்கள் குறித்த லிஸ்ட் ரொம்ப பெரியது. ஆனாலும் குறிப்பாக ஒருசிலவற்றை மட்டும் சொல்கிறேன். ரோஹித் தன்னை சுற்றி நிதானமான சூழல் நிலவச்செய்வார். தன்னைச்சுற்றி பதற்றமான நிலையை எப்போதுமே உருவாக்கமாட்டார். கிரிக்கெட்டை பற்றிய ஆழமான மற்றும் தெளிவான சிந்தனை கொண்டவர் ரோஹித் சர்மா. களத்தில் நெருக்கடியான சூழல்களில் சிறப்பான முடிவுகளை எடுப்பார். அதனால் அவர் மீது வீரர்களுக்கும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அவர் சரியான முடிவுதான் எடுப்பார் என்ற நம்பிக்கை வீரர்களுக்கும் உள்ளது. அவரை வீரர்கள் முழுமையாக நம்புகின்றனர். ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் வித்தை அறிந்தவர் ரோஹித் சர்மா என்று ஜாகீர் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.