இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகியவற்றை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றபோது அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். யுவராஜ் சிங் அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது, அதிகபட்ச விலைக்கு ஏலம்போனார். 

ஒரு காலத்தில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய யுவராஜ் சிங்கை,  இந்த சீசனில் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. அவரது அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வராத நிலையில், இரண்டாம் கட்ட ஏலத்தில் அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் சிக்கல் இருந்த நிலையில், அதற்கு தீர்வாக பார்க்கப்பட்டார் யுவராஜ் சிங். அதற்கேற்றாற்போலவே, யுவராஜ் சிங்கும் தான் இந்த சீசனில் மும்பை அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வாக அமையப்போவதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார். கடந்த சீசனில் மும்பை அணியில் நிலவிய மிடில் ஆர்டர் பிரச்னையால் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, தானாக முன்வந்து மிடில் ஆர்டரில் இறங்கினார். எனவே இந்த சீசனில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவதற்கு நான் உதவிகரமாக இருப்பேன். மிடில் ஆர்டர் பிரச்னையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் யுவராஜ் சிங்.

தான் கொடுத்த வாக்கை டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே ஓரளவிற்கு காப்பாற்றினார் யுவராஜ் சிங். டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார். எனினும் அந்த போட்டியில் இலக்கை விரட்ட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றது.

இந்நிலையில், நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடினார் யுவராஜ் சிங். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 187 ரன்களை குவித்தது. 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கடைசிவரை களத்தில் இருந்தும் கூட, பும்ரா மற்றும் மலிங்காவின் அபாரமான பவுலிங்கால் ஆர்சிபியை கட்டுப்படுத்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. 

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, சாஹல் வீசிய 14வது ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார் யுவராஜ் சிங். ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். யுவராஜ் சிங்கின் அந்த தரமான ஷாட்டுகள் பழைய யுவராஜ் சிங்கை சில நிமிடங்கள் கண் முன் நிறுத்தின. ஹாட்ரிக் சிக்ஸர்களை தொடர்ந்து நான்காவது பந்தையும் சிக்ஸருக்கு விளாச தூக்கி அடித்தார். லைனில் வைத்து அதை சிராஜ் அபாரமாக கேட்ச் பிடித்ததால் யுவராஜ் ஆட்டமிழந்தார். இல்லையென்றால் நேற்றும் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படித்தான் இருந்தது யுவராஜ் சிங்கின் பேட்டிங். 

யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோ இதோ...