ஐபிஎல் 12வது சீசனின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஐபிஎல் 12வது சீசனில் ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணியும் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்தார். ஓராண்டு தடைக்கு பிறகு மீண்டு வந்திருக்கும் டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஓராண்டு தடைக்கு பிறகு வருவதால் வார்னர் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாத அளவிற்கு தொடக்கம் முதலே வார்னர் அடித்து ஆடினார். ஜானி பேர்ஸ்டோவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாகவே ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 118 ரன்களை குவித்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

பேர்ஸ்டோவை 39 ரன்களில் பியூஷ் சாவ்லா அவுட்டாக்கினார். அதன்பிறகு வார்னருடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய வார்னர், 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களை குவித்து ஆண்ட்ரே ரசலின் பந்தில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமான லோ கேட்ச்சை பிடித்து வார்னரை சதமடிக்க விடாமல் வெளியேற்றினார். 

வார்னரின் விக்கெட்டுக்கு பிறகு ரன் வேகம் குறைந்தது. 19வது ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரில் விஜய் சங்கர் அடித்த ஒரு பவுண்டரி உட்பட 11 ரன்கள் எடுக்கப்பட்டது. 20 ஓவர் முடிவில் 181 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி. 182 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் அணி. ரஷீத் கான், புவனேஷ்வர் குமார் என சன்ரைசர்ஸ் அணியில் சிறந்த பவுலர்கள் உள்ளனர். 182 ரன்கள் என்ற சவாலான இலக்கை கேகேஆர் அடிக்கிறதா என்று பார்ப்போம்.