ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் ஆடிவருகின்றன. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளும் மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ஆடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் இரண்டு போட்டிகளில் ஆடி ஒன்றில் வென்றுள்ளன. ராஜஸ்தான் மற்றும் ஆர்சிபி அணிகள் இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோற்றுள்ளன. 

கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. கடந்த சீசனில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிவரை முன்னேறிய சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னரின் வருகை கூடுதல் வலு சேர்த்திருப்பதால் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

ஓராண்டு தடை முடிந்து வந்துள்ள வார்னர், சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ளார். கடந்த சீசனில் ஆடாத வார்னர், தடை முடிந்து வந்த முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளார். கேகேஆருக்கு எதிரான போட்டியில் 85 ரன்களை குவித்த வார்னர், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 69 ரன்களை குவித்தார். இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரராக திகழும் வார்னர், ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். 

வார்னர் குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன், வார்னர் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டமாட்டார். தீவிரமாக பயிற்சி செய்யமாட்டார். சேவாக்கும் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டமாட்டார். ஆனால் களத்தில் சிறப்பாக ஆடுவார். சேவாக்கை போலத்தான் வார்னரும். பயிற்சியில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றாலும் களத்தில் அதிரடியாக ஆடி அடித்து நொறுக்கிவிடுவார் என்று லட்சுமணன் தெரிவித்தார்.