ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி, இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது ஆர்சிபி.

ஆர்சிபி அணி, இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துவருகிறது. கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியில், அந்த அணியை 84 ரன்களுக்கே சுருட்டி, 85 ரன்கள் என்ற எளிய இலக்கை 14வது ஓவரில் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆர்சிபி அணி.

கோலியும் குர்கீரத் சிங் மன்னும் இணைந்து போட்டியை முடித்துவைத்தனர். ஆர்சிபி அணி 84 ரன்கள் அடித்துவிட்ட நிலையில், வெற்றிக்கு இன்னும் ஒரேயொரு ரன்  மட்டுமே தேவைப்பட்டது. அந்த நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய 14வது ஓவரின் 3வது பந்தை தேர்டு மேன் திசையில் அடித்த கோலி, ஒரு ரன் ஓடினாலே வெற்றிதான். ஆனால் கோலியோ ஒரு ரன் ஓடிவிட்டு, 2வது ரன்னும் ஓடினார். குர்கீரத் சிங் மன்னுக்கு, கோலி ஏன் 2வது ரன் ஓடுகிறார் என்பதே புரியவில்லை. ஆனால் சந்தேகத்துடன், அவர் ஓடிவருகிறாரே என்பதற்காக 2வது ரன் ஓடினார்.

கோலி பொதுவாக ரன் ஓடுவதில் வல்லவர். அதிக பவுண்டரி, சிக்ஸர் அடிக்காவிட்டாலும், அவரது ஸ்டிரைக் ரேட் மட்டும் சிறப்பாக இருக்கும். அதற்கு காரணம், சிங்கிள் மற்றும் டபுள்ஸ்களை தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருப்பார். அந்தவகையில், பழக்கதோசத்தில் அனிச்சையாக 2வது ரன் ஓடியிருக்க வேண்டும்.