ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. இந்த 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது.

எஞ்சிய ஒரு இடத்திற்கு கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 4 அணிகளுக்குமே பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால், இனிவரும் போட்டிகள் அனைத்தும் கடுமையாக இருக்கும்.

இந்த சீசனிலாவது முதல் முறையாக கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற தீவிரத்தில் களமிறங்கிய ஆர்சிபி அணி, மிக அருமையாக ஆடி வெற்றிகளை குவித்துவருவதால், கேப்டன் கோலி மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார். அதை அவரது செயல்பாடுகளின் மூலமே தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆர்சிபி அணி சரியாக ஆடாமல் தொடர் தோல்விகளை தழுவும்பட்சத்தில், அந்த சோகம் அவரிடத்தில் அப்பட்டமாக தெரியும். அதேபோலவே தனது அணி சிறப்பாக செயல்பட்டால் கோலி எப்போதுமே மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செம ஜாலியாக இருப்பார்.

அந்தவகையில் இந்த சீசனில் ஆர்சிபி அணி ஆடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. அதனால் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால், களத்திலும் சரி, பயிற்சியிலும் சரி செம உற்சாகமாக இருக்கிறார்.

பொதுவாகவே கோலி, பயிற்சியின்போது சில பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஸ்டைலில் பேட்டிங் ஆடுவது, சில பவுலர்களின் பவுலிங் ஸ்டைலில் பந்துவீசுவது என இமிடேட் செய்வதை வழக்கமாக கொண்டவர். ஹர்பஜன் சிங்கை போல கூட பந்துவீசி காட்டினார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டபோது, சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் கோலிக்கு நிகரான பேட்ஸ்மேனாகவும் திகழும், ஆஸ்திரேலிய வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித்தை போல பேட்டிங் ஆடினார். ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டாண்ட் மற்றும் ஸ்டலை அப்படியே பிரதிபலித்தார் கோலி. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சமகாலத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக கோலியும் ஸ்மித்தும் திகழ்கின்றனர். கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். ஆனால் ஸ்மித் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். அவரது பேட்டிங் ஸ்டைலும் டெக்னிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணியின் பவுலர்களை குழப்பும் விதமாகவும், அவருக்கு எதிரான தெளிவான திட்டத்தை வகுத்து அவரது விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியாத விதமாகவும் இருப்பதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேனாக அவர் திகழ்வது குறிப்பிடத்தக்கது.