ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டின் அதிரடியான பேட்டிங்கால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 213 ரன்களை குவித்தது. 

உலகின் நம்பர் 1 பவுலரும் டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவருமான பும்ராவின் பவுலிங்கையே அடித்து நொறுக்கிவிட்டார் ரிஷப் பண்ட். 214 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

டெல்லி கேபிடள்ஸ் அணியின் பேட்டிங்கின் போது, அந்த இன்னிங்ஸின் கடைசி பந்தை வீசிய பும்ரா, அதை தடுக்க முயற்சிக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை பிசியோ மற்றும் சகவீரர்கள் சேர்ந்து அழைத்து சென்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே அவர்கள் பெரிதும் நம்பியிருந்த மலிங்கா மற்றும் ஆடம் மில்னே ஆடாதது பின்னடைவாக இருக்கும் நிலையில் பும்ராவிற்கும் காயம் ஏற்பட்டது. 

மும்பை இந்தியன்ஸுக்குக்கூட பெரிய இழப்பில்லை. ஆனால் உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பவுலரான பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது, அணி நிர்வாகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் பும்ராவிற்கு பெரிய காயம் இல்லை எனவும் அதனால் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் கிரிக்பஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த போட்டியில் பும்ரா ஆடுவது குறித்த உறுதியான தகவல் இல்லை. இன்னும் சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா ஆடவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவரது முழு உடற்தகுதிதான் முக்கியம்.