ஐபிஎல் 13வது சீசன், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. ஐபிஎல்லில் அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்கார சிஎஸ்கே  அணி, இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட தவறவிட்டுவிட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய 10வது போட்டியிலும் தோற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பில்லை.

இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராகவும், மேட்ச் வின்னராகவும் மட்டுமல்லாது, சிஎஸ்கே கேப்டன் தோனியின் தளபதியாகவும் ஆஸ்தான வீரராகவும் திகழ்ந்த ரெய்னா இந்த சீசனில் ஆடாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. அதன் விளைவாக மிடில் ஆர்டர் பலவீனமடைந்திருப்பதை அப்பட்டமாக பார்க்க முடிகிறது.

இந்த சீசனில் ஆடுவதற்காக துபாய்க்கு சென்ற ரெய்னா, சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால் சீசனிலிருந்து விலகி இந்தியா திரும்பினார். அதனால் அவருக்கும் தோனிக்கும் மற்றும் அணி நிர்வாகத்திற்கும் இடையே மோதல் என்று பேசப்பட்டது.

அப்படியெல்லாம் இல்லை; எங்களுக்கு இடையே நல்ல உறவு தான் இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக ஏற்கனவே ஒரு டுவீட் செய்திருந்தார் ரெய்னா. இந்நிலையில், மீண்டும் அதை செய்துள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய போட்டி, தோனியின் 200வது ஐபிஎல் போட்டி. இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரெய்னா பதிவிட்ட டுவீட்டில், 200வது ஐபிஎல் போட்டியில் ஆடும் முதல் வீரர்.. வாழ்த்துக்கள் தோனி Bhai.. எப்போதுமே எங்களை பெருமைப்படுத்தும் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று ரெய்னா பதிவிட்டுள்ளார்.