ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி சிஎஸ்கே அணி, சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்பி சென்றது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற சிஎஸ்கே அணிக்கு அடுத்தடுத்து விரும்பத்தகாத சம்பவங்களாக நடந்துவருகின்றன.

சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது துபாயில் கண்டறியப்பட்டது. இதையடுத்து மற்ற அணிகள் எல்லாம் பயிற்சியை தொடங்கிய போதிலும், சிஎஸ்கே அணியினர் சிலருக்கு கொரோனா உறுதியானதால், சிஎஸ்கே அணி பயிற்சியை தொடங்குவது தாமதமாகியுள்ளது.

இதற்கிடையே, சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், ரெய்னா கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி துபாயிலிருந்து கோபித்துக்கொண்டு ரெய்னா இந்தியா திரும்பியதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், சிஎஸ்கே அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசனும் ரெய்னாவை கடுமையாக சாடியிருந்தார். 

ரெய்னா இந்தியா திரும்பியதுமே, சிஎஸ்கே அணியின் வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக இன்சைட் ஸ்போர்ட் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லையென்றும், இன்னும் 4-5 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணியிலேயே ஆட விரும்புவதாகவும் ரெய்னா தெரிவித்தார். ரெய்னா, சிஎஸ்கே கேப்டன் தோனி, தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் மற்றும் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் ஆகியோருக்கு, மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆட விரும்புவதாக ரெய்னா மெசேஜ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆடுவது குறித்து கருத்து தெரிவித்த அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், இதுகுறித்து கேப்டன் தோனி தான் முடிவெடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.