Asianet News TamilAsianet News Tamil

#RCBvsSRH ஆர்சிபியை அசால்ட்டா வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி.. மேலும் சுவாரஸ்யமாகிவிட்ட புள்ளி பட்டியல்

ஆர்சிபி நிர்ணயித்த 121 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் அணி.
 

sunrisers hyderabad beat rcb by five wickets and goes to fourth place in points table of ipl 2020
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 31, 2020, 11:22 PM IST

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபியை எதிர்கொண்டு ஆடியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ் உட்பட யாருமே சோபிக்கவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி.

தேவ்தத் படிக்கல்(5), கோலி(7) ஆகிய இருவரையும்  பவர்ப்ளேயிலேயே தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் சந்தீப் ஷர்மா. டிவில்லியர்ஸை 24 ரன்களில் ஷபாஸ் நதீம் வீழ்த்த, மறுமுனையில் நிலைத்து ஆடிக்கொண்டிருந்த இளம் வீரர் படிக்கல்லை 32 ரன்களுக்கு ரஷீத் கான் வீழ்த்தினார்.

அதன்பின்ன 18 பந்தில் 21 ரன்கள் அடித்து ஓரளவிற்கு நம்பிக்கையளித்த வாஷிங்டன் சுந்தரை நடராஜன் வீழ்த்த, மோரிஸை 3 ரன்களிலும் அதற்கடுத்த பந்தில் உடானாவையும்(0) ஹோல்டர் வீழ்த்த, 20 ஓவரில் வெறும் 120 ரன்களுக்கு சுருண்டது ஆர்சிபி அணி. 

121 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி 87 ரன்களை அடித்த சஹா, இந்த போட்டியிலும் அருமையாக ஆடினார். சஹா 39 ரன்களும் மனீஷ் பாண்டே 26 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் தலா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹோல்டர், 3 சிக்ஸர்களை விளாசி பதினைந்தாவது ஓவரிலேயே போட்டியை முடித்தார்,

ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் 4ம் இடத்திற்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ், பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் ஆகிய 4 அணிகளும் தலா 13 போட்டிகளில் தலா 12 புள்ளிகளுடன் முறையே நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய இடங்களில் உள்ளன. 

லீக் சுற்றில் இன்னும் 4 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பிளே ஆஃபிற்கு மும்பை இந்தியன்ஸ் மட்டுமே தகுதிபெற்றுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு ஆறு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. புள்ளி பட்டியல், இந்த சீசனும் மேலும் சுவாரஸ்யமடைந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios