ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இரு அணிகளுமே முதல் போட்டியில் தோற்றதால், இந்த போட்டியில் வெற்றி முனைப்பில் களமிறங்கின. முதல் போட்டியில் காயத்தால் ஆடாத சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் இந்த போட்டியில் ஆடினார். டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆட்டத்தை தலைகீழாக மாற்றக்கூடிய பட்லரை தொடக்கத்திலிருந்தே அடித்து ஆட விடாமல் சன்ரைசர்ஸ் பவுலர்கள் கட்டுப்படுத்தினர். ரஷீத் கானின் பவுலிங்கில் இதுவரை பட்லர் சரியாக ஆடியதில்லை என்பதால், பவர்பிளேயில் 4வது ஓவரை ரஷீத் கானை வீச வைத்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன். அதற்கு பலனும் கிடைத்தது. அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே பட்லரை வீழ்த்திவிட்டார் ரஷீத். 

அதன்பின்னர் ரஹானேவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்தது. பவர்பிளேயில் முதல் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின்னர் சாம்சனின் அதிரடியான பேட்டிங்கால் ரன் மளமளவென உயர்ந்தது. ரஹானே - சாம்சன் ஜோடி அடித்து ஆட, 12 ஓவரின் முடிவிலேயே 100 ரன்களை எட்டியது ராஜஸ்தான் அணி. பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ரஹானே 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகும் அபாரமாக ஆடிய சாம்சன், இன்னிங்ஸின் கடைசி ஓவரில் சதத்தை எட்டினார். 4வது ஓவரிலேயே களத்திற்கு வந்து அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நல்ல ஸ்கோரை எட்ட உதவினார் சாம்சன். சாம்சனின் இன்னிங்ஸ் அபாரமானது. 55 பந்துகளில் 102 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம்சனின் அதிரடியால் ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 198 ரன்களை குவித்தது. 

199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் பேர்ஸ்டோவும் இணைந்து தொடக்கம் முதலே அடித்து ஆடினர். அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இதுமாதிரியான தொடக்கம் அமைந்தால் எவ்வளவு பெரிய இலக்கையும் எளிதாக விரட்டிவிடலாம். 9வது ஓவரிலேயே அந்த அணி 100 ரன்களை எட்டியது. வார்னர் - பேர்ஸ்டோ தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்களை குவித்தது. வார்னர் 37 பந்துகளில் 69 ரன்களையும் பேர்ஸ்டோ 28 பந்துகளில் 45 ரன்களையும் குவித்தனர். 

அவர்களின் விக்கெட்டுகளுக்கு பிறகு அவர்கள் விட்டுச்சென்ற பணியை விஜய் சங்கர் செவ்வனே செய்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய விஜய் சங்கர், 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர், வில்லியம்சன், மனீஷ் பாண்டே என ராஜஸ்தான் அணி அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தாலும், தேவைப்படும் ரன்ரேட் மிகவும் குறைவாகவே இருந்தது. பந்துகளும் தேவைப்படும் ரன்களும் சமமாகவே இருந்ததால் அது சன்ரைசர்ஸ் அணியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. கடைசியில் ரஷீத் கான், 19வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். 

199 ரன்கள் என்ற கடின இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.