ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பாவும் பென் ஸ்டோக்ஸும் களமிறங்கினர். பென் ஸ்டோக்ஸ் சரியான ஷாட் கனெக்ட் ஆகாமல் திணற, ராபின் உத்தப்பாவோ, நல்ல ஃப்ளோவில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ராபின் உத்தப்பாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், 13 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் அடித்திருந்த நிலையில், தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் வழக்கம்போலவே நல்ல ஷாட்டுகளை தெளிவாக ஆடி நன்றாக தொடங்கினார். மறுமுனையில், ஆரம்பம் முதலே பென் ஸ்டோக்ஸ் அடித்து ஆடமுடியாமல் திணறிக்கொண்டிருக்க, சாம்சன் நன்றாக ஆடினார். 26 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் அடித்த நிலையில், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் ஆட்டமிழக்க, தொடக்கம் முதலே திணறிய பென் ஸ்டோக்ஸ், 32 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

களத்தில் செட்டில் ஆகியிருந்த சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் முறையே அடுத்தடுத்த ஓவர்களில்(12, 13) ஆட்டமிழக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அதற்கு காரணம் பென் ஸ்டோக்ஸ் 13வது ஓவரின் முதல் பந்தில் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் வெறும் 86. 

ரஷீத் கானுக்கு எதிராக 4 முறை அவுட்டாகியுள்ள பட்லர், அவரை எப்படியாவது சமாளித்து ஆடவேண்டும் என்ற முனைப்பில் அதை சரியாக செய்தார். ஆனால் ரஷீத் கானிடம் தப்பிய பட்லர், விஜய் சங்கரிடம் சிக்கினார். விஜய் சங்கர் வீசிய 16வது ஓவரின் 3வது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். 12 பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த இளம் வீரர் ரியான் பராக், நடராஜன் வீசிய 18வது ஓவரில் அருமையாக ஆடினார். 

ஸ்மித் பதினைந்து பந்தில் 19 ரன்களுக்கு 19வது ஓவரில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ரியான் பராக்கும் ஆட்டமிழந்தார். ரியான் பராக் 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நடராஜன் வீசிய கடைசி ஓவரில் ஆர்ச்சர் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாச, 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் அடித்து 155 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு நிர்ணயித்தது.

155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர், ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பேர்ஸ்டோவும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் அணி 16 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டேவும் விஜய் சங்கரும் அருமையாக ஆடினர். இருவரும் இணைந்து விக்கெட்டை இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக ஆடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். ஒருமுனையில் மனீஷ் பாண்டே அடித்து ஆட, மறுமுனையில் விஜய் சங்கர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவசரப்படாமல் சிங்கிள் ரொடேட் செய்து மனீஷ் பாண்டேவிற்கு ஸ்டிரைக் கொடுத்தார்.

அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே 28 பந்தில் அரைசதம் அடிக்க, அதன்பின்னரும் ஆக்ரோஷமாக பெரிய ஷாட்டுகளை ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர். 19வது ஓவரின் முதல் பந்தில் வின்னிங் ஷாட் பவுண்டரி அடித்த விஜய் சங்கர் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.

மனீஷ் பாண்டே 47 பந்தில் 83 ரன்களையும், விஜய் சங்கர் 51 பந்தில் 52 ரன்களையும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளை பெற்று, புள்ளி பட்டியலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை(நெட் ரன்ரேட் அடிப்படையில்) பின்னுக்குத்தள்ளி ஐந்தாமிடத்தை பிடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.