ஐபிஎல் 12வது சீசன் வரும் 23ம் தேதி(நாளை) தொடங்குகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

டெல்லி கேபிடள்ஸ் அணி கடந்த சீசனில் கவுதம் காம்பீரின் தலைமையில் களமிறங்கியது. தொடர் தோல்விகளின் எதிரொலியாக காம்பீர் தொடரின் பாதியில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்றார்.

ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில் டெல்லி அணி சில வெற்றிகளை குவித்தது. இந்த சீசனில் தொடரை வெல்லும் முனைப்புடன் டெல்லி அணி களமிறங்குகிறது. இந்த சீசனில் தவானை டெல்லி அணி எடுத்துள்ளது. பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் என திறமையான இளம் வீரர்கள் நிறைந்த அணியாக டெல்லி அணி உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் மேக்ஸ்வெல் மற்றும் தவான் ஆகிய சீனியர் வீரர்களும் உள்ளனர். பவுலிங்கில் டிரெண்ட் போல்ட் பலம் சேர்க்கிறார். இந்த சீசனில் இஷாந்த் சர்மாவும் அணியில் இணைந்துள்ளார். இந்த முறை கோப்பையை எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி உள்ளது. ஏற்கனவே ரிக்கி பாண்டிங் என்ற ஜாம்பவான் தலைமை பயிற்சியாளராக உள்ள நிலையில், மற்றொரு ஜாம்பவானான கங்குலியை ஆலோசகராக நியமித்துள்ளது டெல்லி அணி.

இவ்வாறு இந்த சீசனை வெல்லும் முனைப்பில் தீவிரமாக உள்ளது டெல்லி அணி. இந்நிலையில், ஐபிஎல்லின் இளம் கேப்டனாக திகழும் ஷ்ரேயாஸ் ஐயர், தான் முன்னோடியாக பார்க்கும் கேப்டன் யார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மாவின் வளர்ச்சி அதீதமானது. அவர் அனைத்து வீரர்களுக்கும் சிறந்த முன்னுதாரணம். எனக்கு தனிப்பட்ட முறையில், மிகச்சிறந்த முன்னுதாரணம் ரோஹித் சர்மா. ரோஹித்திடம் கேப்டன்சி குறித்து நான் பேசியதில்லை. ஆனால் ஒரு நல்ல கேப்டனிடமிருந்து நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் ரோஹித்திடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதோடு அவரது பாதையை பின்பற்ற விரும்புவதாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

உத்தி ரீதியாகவும், கள வியூகங்களிலும், பவுலிங் சுழற்சியிலும் சிறந்த கேப்டனாக திகழ்கிறார் ரோஹித் சர்மா. விராட் கோலியை ரோஹித் சர்மா சிறந்த கேப்டன். 2013, 2015, 2017 ஆகிய 3 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமான அணியாக திகழ, ரோஹித்தின் கேப்டன்சியும் முக்கிய காரணம். ரிக்கி பாண்டிங் என்ற ஜாம்பவானுக்கு பிறகு ரோஹித்திடம் வந்தது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பு. அதை சிறப்பாக செய்து 3 முறை கோப்பையை வென்று கொடுத்து, வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார் ரோஹித்.