ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், கேகேஆர், சன்ரைசர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே எஞ்சிய 3 இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஜோடியான வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி அதிரடியான மற்றும் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக திகழ்கிறது. அந்த அணி அடித்துள்ள சுமார் 70% ரன்கள் இவர்கள் இருவரும் அடித்ததுதான். வார்னர் 400 ரன்களுக்கும் மேல் குவித்து ஆரஞ்சு தொப்பியை வைத்துள்ளார். டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர் ரபாடா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். 

ஆண்ட்ரே ரசல் இந்த சீசனில் அதிரடியாக ஆடிவருகிறார். சிறந்த ஃபினிஷராக உருவெடுத்துள்ளார். ஹர்பஜன் சிங்கும் இந்த சீசனில் அபாரமாக பந்துவீசிவருகிறார். 

இந்நிலையில், இந்த சீசனில் சிறப்பாக ஆடும் வீரர்களை கொண்டு இந்த சீசனின் சிறந்த அணியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷான் டைட் அறிவித்துள்ளார். தோனியை கேப்டனாக கொண்ட அந்த அணியில் வார்னர், பேர்ஸ்டோ, விராட் கோலி, ரசல் ஆகியோர் உள்ளனர். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான பும்ராவிற்கு இந்த அணியில் இடம் இல்லை. அதேபோல டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோருக்கும் இடம் இல்லை. 

ஷான் டைட் தேர்வு செய்த இந்த சீசனின் சிறந்த அணி:

வார்னர், பேர்ஸ்டோ, கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ரபாடா, சாஹல், ஷமி, ஹர்பஜன் சிங்.