ஐபிஎல் 13வது சீசன் முடியவுள்ள நிலையில், இந்த சீசனில் தான் முதல்முறையாக சிஎஸ்கே அணி, பிளே ஆஃபிற்கு தகுதிபெறாமல் வெளியேறுகிறது. இதற்கு முன் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய சிஎஸ்கே அணி, இம்முறை லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டது.

சிஎஸ்கே அணிக்கு இது சரியான சீசனாக அமையவில்லை. வயது முதிர்ந்த வீரர்களை கொண்ட அணி என்று கலாய்க்கப்பட்ட சிஎஸ்கே அணி, அதன் தாக்கத்தை இந்த சீசனில் அறுவடை செய்தது. எனவே அணியில் உள்ள சீனியர் வீரர்களை கழட்டிவிட்டு, எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களை கொண்ட அணி கட்டமைக்கப்படவுள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான போட்டிக்கு பின்னர், அடுத்த பத்தாண்டுகளுக்கான அணியை கட்டமைக்கவுள்ளதாக கேப்டன் தோனி தெரிவித்தார். எனவே அடுத்த சீசனில் வாட்சன் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பிருக்காது.

இந்நிலையில், ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்துள்ளார். சிஎஸ்கே வீரர்களிடம் தனது ஓய்வு முடிவை தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். 39 வயதான வாட்சன், ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 59 டெஸ்ட், 190 ஒருநாள், 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்ட வாட்சன், ஐபிஎல்லில் ஆடிவந்தார். 

2018லிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிவந்த வாட்சன், சிஎஸ்கே அணிக்கு தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். 2018 ஐபிஎல் இறுதி போட்டியில் சன்ரைசர்ஸுக்கு எதிராக தனி ஒருவனாக போராடி சிஎஸ்கே அணி 3வது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். 2019 ஐபிஎல் இறுதி போட்டியிலும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனி ஒருவனாக கடைசிவரை போராடினார்.

சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல்லில் 43 போட்டிகளில் ஆடியுள்ள வாட்சனுக்கு, இந்த சீசன் சரியாக அமையவில்லை. இந்நிலையில், ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவதாக தனது சக சிஎஸ்கே வீரர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்துள்ளார்.

தனது 3 ஆண்டுகளாக மதிப்பும் ஆதரவும் அளித்த சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றுள்ளார் வாட்சன்.