கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று. 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு சீசன்களில் கோப்பையை வென்ற அணி. கேகேஆர் அணிக்கு 2 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் காம்பீர், கடந்த சீசனில் டெல்லி அணிக்காக ஆடினார். இதையடுத்து கடந்த சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையில் கேகேஆர் அணி களம் கண்டது. 

கடந்த சீசனில் பிளேஆஃப் சுற்று வரை சென்ற கொல்கத்தா அணி பிளே ஆஃபில் வெளியேறியது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணி சிறப்பாகவே ஆடிவருகிறது. இந்த சீசனிலும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக செயல்படுகிறார். 

கொல்கத்தா அணியின் அதிரடி மற்றும் வெற்றி வீரர் ஆண்ட்ரே ரசல். தான் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை நேற்று நிரூபித்தார். கடின இலக்கையும் கடைசி ஓவர்களில் தனது அதிரடியால் சாத்தியமாக்கும் திறமை கொண்டவர் ரசல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், வார்னரின் அதிரடியால் அந்த அணி 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், ஷாகிப் அல் ஹாசன், சித்தார்த் கவுல் என சிறந்த பவுலர்களை கொண்ட சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 183 ரன்கள் என்பது கடின இலக்குதான். 

183 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியில் ராணாவும் உத்தப்பாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவிற்கு ஆடினர். எனினும் கிறிஸ் லின், உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தபிறகு களத்திற்கு வந்த ஆண்ட்ரே ரசல், தொடக்கத்தில் நிதானமாக ஆடினர். பின்னர் டெத் ஓவர்களில் சிக்ஸர்களாக பறக்கவிட்டு வெற்றியை பறித்தார். முதல் 9 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரசல், 19 பந்துகளில் 49 ரன்களை குவித்து வெற்றியை பெற்று கொடுத்தார். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கை வெளுத்து வாங்கிவிட்டார். புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 

ரசலின் அதிரடியான பேட்டிங்கால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது. இந்த வெற்றி குறித்து அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கான், ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், கொல்கத்தா ரசிகர்கள் தனக்கு அளித்த வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போய், தனக்கு அழுகை வந்ததாகவும், ஆனால் அதை அடக்கி கொண்டதாகவும் ஆண்ட்ரே ரசல் என்னிடம் தெரிவித்தார். ரசல், உத்தப்பா, ராணா, கில் மற்றும் ஒட்டுமொத்த கேகேஆர் அணியும் உங்களின் அன்புக்காகத்தான் ஆடுகிறார்கள் கொல்கத்தா ரசிகர்களே என்று ஷாருக்கான் பதிவிட்டுள்ளார்.