டி20 கிரிக்கெட் என்றாலே பெரிய ஷாட்டுகளை ஓங்கி ஓங்கி அடிப்பதுதான் என்பது பொதுப்பார்வை(பெரும்பாலானோரின் கருத்து). ஆனால் அப்படியல்ல; முறையான மரபார்ந்த, தெளிவான, சாமர்த்தியமான பேட்டிங்கின் மூலமும் டி20 கிரிக்கெட்டில் அசத்தலாம் என்பதற்கு உதாரணமான பல இன்னிங்ஸ்களில் ஒன்றுதான், ஆர்சிபிக்கு எதிரான ரஹானேவின் பேட்டிங்.

ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்துவந்த டெல்லி அணி, திடீரென, தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்தது. அதற்கு அந்த அணியின் மோசமான பேட்டிங் தான் காரணம். பிரித்வி ஷா ஃபார்மில் இல்லாததால் பிரேக் கொடுக்கப்பட்டது, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஃபார்மில் இல்லாதது ஆகிய காரணங்களால் பேட்டிங் ஆர்டர் சீட்டுக்கட்டுபோல் சில போட்டிகளில் சரிந்தது.

எனவே பேட்டிங் ஆர்டரில் நிலைத்தன்மையை உருவாக்கும் விதமாக, ஆர்சிபிக்கு எதிராக ரஹானே சேர்க்கப்பட்டு, ஹெட்மயர் நீக்கப்பட்டார். இந்த சீசனில் இதற்கு முன், ரிஷப் பண்ட்டின் காயம் மற்றும் பிரித்வி ஷாவிற்கு பிரேக் கொடுக்கப்பட்டபோது, கிடைத்த வாய்ப்புகளில் ரஹானே சரியாக ஆடவில்லை. ஆனால் சீனியர் வீரரான அவர் அணியின் பேட்டிங் ஆர்டரில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில், தவான் மற்றும் பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக இறங்கியபோதிலும், மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானேவிற்கும் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது.

பிரித்வி ஷா 9 ரன்களுக்கு 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்தபோதிலும், அதன்பின்னர் தவானுடன் இணைந்து தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் ரஹானே. 2வது விக்கெட்டுக்கு தவானும் ரஹானேவும் இணைந்து 88 ரன்களை குவித்தனர். விக்கெட் வீழ்ச்சிதான் டெல்லி அணிக்கு பிரச்னையாக இருந்தது. அதே தவறு ஆர்சிபிக்கு எதிராக நடந்துவிடாமல் இலக்கு கடினமில்லாதது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப நிதானமான தெளிவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது அனுபவத்தின் மூலம் டெல்லி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார் ரஹானே. ரஹானே 46 பந்தில் 60 ரன்கள் அடித்தார்.

ரஹானேவின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், மிகக்குறைவானோரே, ரஹானேவை டி20 வீரராக பார்க்கிறார்கள். ரஹானே பவுண்டரி, சிக்ஸர் அடிக்கமாட்டார் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் ரஹானே மாதிரியான ஒரு வீரர் ஒருமுனையில் நிற்கும்போது, மறுமுனையில் அடித்து ஆடலாம். பிரித்வி ஷா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் இணைத்து ஆடும் லெவனில் ஆடவைத்த பாண்டிங்கின் முடிவு கடினமானது. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக இருந்து பாண்டிங் அந்த முடிவை எடுத்திருக்கிறார்.

ரஹானே மாதிரியான அனுபவம் நிறைந்த வீரர், 3-4  போட்டிகளில் சரியாக ஆடவில்லையென்றால், அடுத்த போட்டியில் சிறப்பாக கம்பேக் கொடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். அதைத்தான் ரஹானே செய்துள்ளார். 46 பந்தில் 60 ரன்கள் அடித்து, அவரது சராசரி ஸ்டிரைக் ரேட்டை விட அதிகமான ஸ்டிரைக் ரேட்டில்(130) ஆடியுள்ளார் என்று சேவாக், ரஹானேவை புகழ்ந்துள்ளார்.