ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், சன்ரைசர்ஸை வீழ்த்தி கொல்கத்தா அணியும், மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸும் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை 11 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இணைந்து 8 முறை கோப்பையை வென்றுள்ளன. சில அணிகள் தொடர்ந்து கோப்பையை வென்றுவரும் நிலையில், சில அணிகள் தொடர்ந்து சொதப்பிவருகின்றன. இதுவரை கோப்பையை வென்றிராத ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளுமே முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. அதற்காக பல அதிரடி மாற்றங்களையும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. 

ஆனாலும் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. ஆனால் டெல்லி கேபிடள்ஸ் அணி, 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

ஐபிஎல் 12வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இலங்கை முன்னாள் ஜாம்பவான் சங்கக்கரா மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகிய இருவரும் இந்த முறை ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என ஆருடம் தெரிவித்துள்ளனர். 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளில் ஒன்று வெல்லும் என சங்கக்கரா தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான் வெல்லும் என ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.