தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார் ரோஹித் சர்மா.  

ரோஹித் சர்மா தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி திறன், ஐபிஎல்லின் மூலமாகத்தான் வெளிவந்தது. 2013, 2015, 2017 என மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களை கையாளும் விதம், பொறுமை, நிதானம் என கேப்டன்சியில் கலக்குறார் ரோஹித் சர்மா.

கோலி ஆடாத போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, அதிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். ஆசிய கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பொறுப்பேற்றுக்கொள்ள பணித்தால், அதை ஏற்று கேப்டனாக செயல்பட தயாராக இருப்பதாக வெளிப்படையாகவே அதிரடியாக தெரிவித்தார். 

ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட முழு தகுதியுடையவர் தான். கோலியை விட கேப்டன்சி திறன் ரோஹித்துக்கு அதிகம்தான். அதை பல தருணங்களில் களத்தில் அவரது செயல்பாடுகளின் மூலம் அறிய முடியும். 

இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவ் - குருணல் பாண்டியாவின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா - பொல்லார்டின் அதிரடியான பேட்டிங்கால் 170 ரன்களை குவித்தது. 

171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியும் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட, தோனியும் கேதர் ஜாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். எனினும் அவர்களால் இலக்கை விரட்ட முடியவில்லை. 133 ரன்கள் மட்டுமே அடித்ததால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்பின்னர் ராகுல் சாஹர் மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வீச வாய்ப்பளிக்கப்பட்டது. அதேபோல குருணல் பாண்டியாவும் வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வெறும் 4 ஓவர்கள் மட்டுமே ஸ்பின் வீசப்பட்டது. 

மற்ற ஓவர்களை பும்ரா, மலிங்கா, பெஹ்ரெண்டோர்ஃப், ஹர்திக் பாண்டியா ஆகிய நால்வரும் வீசினர். ராகுல் சாஹர் நன்றாக வீசினாலும், அவருக்கு முழு கோட்டாவை வீச வாய்ப்பளிக்கவில்லை. போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ராகுல் சாஹர் நன்றாகத்தான் வீசினார். எனினும் தோனியும் கேதரும் ஸ்பின்னை நன்றாக ஆடுவார்கள் என்பதால், அவருக்கு 2 ஓவர்கள் மட்டுமே வழங்கிவிட்டு ஃபாஸ்ட் பவுலர்களுக்கு வாய்ப்பளித்ததாக தெரிவித்தார். 

சூழலை உணர்ந்து அதற்கேற்றவாறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்துவதில் தான் வல்லவர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ரோஹித் சர்மா.