சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் அல்ஸாரி ஜோசப், 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே அபார சாதனை படைத்தார். அவரது வருகை அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.  

நடந்துவரும் ஐபிஎல் 12வது சீசனை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமாக தொடங்கவில்லை என்றாலும், கடைசி இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றுள்ளது. 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. கடந்த சீசன் அந்த அணிக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த சீசனில் மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் 4 மற்றும் 5வது போட்டிகளில் முறையே சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரண்டு வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றி கண்டது. 

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் அல்ஸாரி ஜோசப், 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே அபார சாதனை படைத்தார். அவரது வருகை அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 

உள்நாட்டு போட்டிகளில் ஆட இலங்கைக்கு சென்ற மலிங்கா, ஐபிஎல்லில் ஆட மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். பும்ரா, மலிங்கா, அல்ஸாரி ஜோசப் என வலுவான மற்றும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ஏற்கனவே பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, தோற்ற நிலையில் இன்றைய போட்டியில் சொந்த மண்ணில் பஞ்சாப்பை மீண்டும் எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டபோது தொடைப்பகுதியில் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான ஐபிஎல் பயணத்திற்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக முக்கியமான காரணம். அவர் பேட்டிங்கில் பெரும்பாலும் சோபிக்காவிட்டாலும் கேப்டன்சியில் மிரட்டுகிறார். இந்நிலையில், பஞ்சாப்புக்கு எதிரான போட்டிக்கு முன்பாக அவர் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு. 

காயம் காரணமாக ரோஹித் இன்றைய போட்டியில் ஆடுவாரா என்பது தெரியவில்லை. அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. எனினும் ஒருவேளை ரோஹித் சர்மா ஆடாவிட்டால் அது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாகவும் பின்னடைவாகவும் அமையும். ரோஹித் சர்மா ஆடாவிட்டால் கேப்டனாக யார் செயல்படுவார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மலிங்கா கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது.