ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், புள்ளி பட்டியலில் கேகேஆர் அணி முதலிடத்திலும் டெல்லி கேபிடள்ஸ் அணி இரண்டாமிடத்திலும் உள்ளன. 

சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் நான்காமிடத்தில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது வெற்றியை பெற்ற பஞ்சாப் அணி நான்காமிடத்தை பிடித்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் திரில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வியை தழுவியது. 

பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுலின் பொறுப்பான அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.