ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ், இந்த போட்டியில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.

டி காக் 2வது ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், களமிறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். சந்தீப் வாரியர் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். ஹாட்ரிக் உட்பட மொத்தம் 4 பவுண்டரிகளை அந்த ஓவரில் விளாசினார்.

ஒருமுனையில் சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட, மறுமுனையில் ஹிட்மேனும் தனக்கே உரித்தான ஸ்டைலில் புல் ஷாட்டுகளில் சிக்ஸர்களை விளாசினார். கேகேஆர் அணியால் ரூ.15.5 கோடிக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் பாட் கம்மின்ஸின் பந்தை தனது ஃபேவரைட் ஷாட்டான புல் ஷாட்டின் மூலம் மிட் விக்கெட் திசையில் அருமையாக சிக்ஸருக்கு அனுப்பினார்.

ரோஹித்தும் சூர்யகுமாரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் 46 ரன்களில் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ரோஹித் சர்மா அரைசதம் கடந்து டெத் ஓவரிலும் ஆடிவருகிறார்.