ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த சீசனுக்கான முழு போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.

இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டுவருகின்றன. மேலும் பெஸ்ட் டீம் காம்பினேஷனை தயார் செய்துவருகின்றன.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு, ரிக்கி பாண்டிங் என்ற மிகப்பெரும் ஜாம்பவான் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறப்பாக வழிநடத்திவருகிறார். டெல்லி கேபிடள்ஸ் அணி, 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சீசனில் தான் பிளே ஆஃபிற்கு சென்றது. டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி என துடிப்பான இளம் வீரர்களும், ரஹானே, தவான், அஷ்வின் என அனுபவம் வாய்ந்த வீரர்களும் என துடிப்பான இளமையும் அனுபவமும் கலந்த கலவையாக அந்த அணி உள்ளது.

எனவே இந்த சீசனில் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனில் மிரட்டப்போகிறது என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது பயிற்சியில் பிரித்வி ஷாவின் ஆட்டம். 

இந்தியாவின் வளர்ந்துவரும், மிகத்திறமையான இளம் வீரரான பிரித்வி ஷா, டெல்லி கேபிடள்ஸ் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் நிலையில், வலைப்பயிற்சியில் அவரது பேட்டிங்கை தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உன்னிப்பாக கவனித்து, அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி அவரை மேலும் வளர்த்துவருகிறார். அந்தவகையில், பிரித்வி ஷா பயிற்சியில் பேட்டிங் ஆடுவதை ரிக்கி பாண்டிங் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்டிரைட் திசையில் தூக்கியடித்து சிக்ஸருக்கு விரட்டினார் பிரித்வி ஷா. அதைக்கண்டு வியந்த பாண்டிங் Awesome Shot என்று பாராட்டியுள்ளார். அந்த வீடியோவை டெல்லி கேபிடள்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் பாண்டிங் Awesome Shot என்று பாராட்டுவது கேட்கிறது.

ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்கள் மற்றும் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மிகப்பெரிய ஜாம்பவனான பாண்டிங்கிடமிருந்து பாராட்டை பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. இளம் திறமைசாலியான பிரித்வி ஷாவை பாண்டிங் தொடர்ந்து பாராட்டிவந்துள்ளார். எனவே பிரித்வி ஷாவின் பேட்டிங் திறமை பாண்டிங்கிற்கு நன்றாகவே தெரியும் என்றாலும், பிரித்வி ஷாவின் அந்த ஒரு ஷாட் பாண்டிங்கை வெகுவாக கவர்ந்துவிட்டது.