ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. 

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, நடப்பு சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் தொடங்கியது. ஆனால் கடந்த சீசனைவிட இந்த சீசன் மிகுந்த சோகமானதாக அமைந்தது. முதல் 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பஞ்சாப் அணியை நேற்று எதிர்கொண்டது. 

இந்த போட்டியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் 174 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் எட்டி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 

ஆர்சிபி அணி முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பொதுவாக அனைத்து அணிகளுமே இதற்கு முந்தைய சீசன்களைவிட பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொள்கின்றன. இந்த சீசனில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே ஆகிய இருவரும் பந்துவீச அதிக நேரம் எடுத்ததற்காக அபராதம் கட்டியுள்ளனர். இந்நிலையில் தற்போது விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.