ஐபிஎல் 12வது சீசன் இன்று தொடங்குகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

இந்த சீசனிலாவது முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி களமிறங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியுமான சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி. 

சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்றே ஆர்சிபி அணி நினைக்கும். சிஎஸ்கே அணியில் நல்ல ஆல்ரவுண்டர்கள் பலர் உள்ளனர். பொதுவாகவே அந்த அணி வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் ஆல்ரவுண்டர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும். வாட்சன், பிராவோ, வில்லி ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. அதனால் சிஎஸ்கேவிற்கு ஈடான வலுவான அணியுடன் தான் ஆர்சிபியும் களமிறங்கும். 

ஆர்சிபி அணியிலும் பல வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்கள் மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் குல்ட்டர்நைல் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடிவருவதால் சில போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு ஆட முடியாது. அதனால் அவர்கள் இன்றைய போட்டியில் இருக்கமாட்டார்கள். 

அதேநேரத்தில் டிவில்லியர்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஹெட்மயர் ஆகியோர் அணியில் இருப்பர். அதேபோல நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோலின் டி கிராண்ட்ஹோம், இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஆகியோரும் அணியில் இருப்பர். டிவில்லியர்ஸ், ஹெட்மயர், கோலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் ஆர்சிபி அணியின் ஆடும் லெவனில் இருப்பர் என்று எதிர்பார்க்கலாம். 

பார்த்திவ் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சாஹல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய இந்திய வீரர்களும் அணியில் இடம்பிடிப்பர்.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), டிவில்லியர்ஸ், ஹெட்மயர், கோலின் டி கிராண்ட் ஹோம், மொயின் அலி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சாஹல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ். 

ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல், ஹெட்மயர், கோலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோர் தாறுமாறாக அடித்து ஆடக்கூடிய அதிரடி வீரர்கள். இவர்களுடன் பொறுப்பான விராட் கோலியும் இருக்கிறார்.