மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கடைசிவரை களத்தில் இருந்தும் கூட, அவரை பெரிய ஷாட்டுகளை அடிக்கவிடாமல், கடைசி இரண்டு ஓவர்களில் அவரை கட்டுப்படுத்தி, ஆர்சிபி அணியை 181 ரன்களில் சுருட்டி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி, 16 ஓவர் முடிவில் 147 ரன்களை குவித்துவிட்டது. எஞ்சிய 4 ஓவரில் வெறும் 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்படியான நெருக்கடியான சூழலில் 17வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்ததோடு, ஹெட்மயரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஹர்திக் வீசிய 18வது ஓவரில் 18 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி 2 ஓவரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

மீண்டும் கூடுதல் நெருக்கடியுடன் அந்த ஓவரை வீசிய பும்ரா, டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தும்கூட, அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் ஆர்சிபி அணியை 17 ரன்கள் அடிக்கவிடாமல் மலிங்கா தடுத்தார். மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்து களத்தில் இருந்தும் அவரை நிராயுதபாணியாக பும்ரா நிற்கவிட்டது செம கெத்தான சம்பவம்தான்.

இந்நிலையில், பும்ராவின் திறமையை புகழ்ந்து தள்ளியுள்ளார் டிவில்லியர்ஸ். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு டிவில்லியர்ஸ் எழுதிய கட்டுரையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பும்ரா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் உண்மையாகவே என்னை கடைசி நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு திண்டாட வைத்துவிட்டார். எல்லா கிரெடிட்டும் பும்ராவுக்குத்தான். ஸ்பெஷலான திறமை பெற்றவர் பும்ரா. சின்னசாமி மைதானத்தில் எத்தனையோ பவுலர்களை எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன். ஆனால் பும்ராவை போன்றதொரு பவுலரை எதிர்கொண்டதேயில்லை. பும்ரா துணிச்சலானவரும் கூட. நெருக்கடியான சூழலில் நிறைய வீரர்கள் பயந்துவிடுவார்கள். ஆனால் அவரது திட்டத்தில் உறுதியாக இருந்து சிறப்பாகவும் தெளிவாகவும் செயல்படுத்துகிறார் பும்ரா என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் டிவில்லியர்ஸ்.