ஐபிஎல் 13வது சீசனில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும், முதலிடம் யாருக்கு என்ற போட்டியில் இன்று ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொல்லார்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. ஃபின்ச்சுக்கு பதிலாக ஜோஷ் ஃபிலிப், நவ்தீப் சைனிக்கு பதிலாக ஷிவம் துபே, மொயின் அலிக்கு பதிலாக டேல் ஸ்டெய்ன் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

தொடக்க வீரர்களாக ஃபிலிப்பும் படிக்கல்லும் களமிறங்கினர். இரு இளம் வீரர்களும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 8 ஓவரில் 71 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய ஃபிலிப் 24 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும்  ஒரு சிக்ஸருடன் 33 ரன்கள் அடித்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, படுமந்தமாக ஆடி 14 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 9 ரன்களுக்கு பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் கெரியரில் தனது முதல் விக்கெட்டாக கோலியை வீழ்த்திய பும்ரா, 100வது விக்கெட்டாகவும் கோலியை வீழ்த்தினார். இன்று பும்ரா வீழ்த்திய கோலியின் விக்கெட் தான், பும்ராவின் 100வது ஐபிஎல் விக்கெட்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் பும்ரா, போல்ட், பாட்டின்சன், ராகுல் சாஹர் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் போட்டு பொளந்துகட்டிய படிக்கல், அரைசதம் அடித்தார். கோலி சோபிக்காத நிலையில், ஆர்சிபி அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸூம் சோபிக்கவில்லை. டிவில்லியர்ஸ் 12 பந்தில் 15 ரன்கள் அடித்து பொல்லார்டு வீசிய பதினாறாவது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷிவம் துபே, ஆறு பந்தில் இரண்டே ரன் அடித்து ஆட்டமிழந்ததுடன், ரன்வேகத்தையும் குறைத்துவிட்டு சென்றார்.

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடித்து ஆடமுயன்று, படிக்கல்லும் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 45 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்களுக்கு படிக்கல் ஆட்டமிழக்க, டெத் ஓவர்களில் குர்கீரத் சிங் மன்னும் வாஷிங்டன் சுந்தரும் ஒருசில பவுண்டரிகளை அடித்தனர். இதையடுத்து 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி 165 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. இஷான் கிஷன், டி காக், சூர்யகுமார், பாண்டியா பிரதர்ஸ், பொல்லார்டு என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை இந்தியன்ஸுக்கு இது எளிதான இலக்கு. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பதினாறு புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்கவைப்பதுடன், பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும்.