ஷ்ரேயாஸ் தனது அடுத்த ஓவரில் டிவில்லியர்ஸையும் அதற்கடுத்த ஓவரில் ஹெட்மயரையும் வீழ்த்தினார். தனது முதல் மூன்று ஓவர்களிலும் ஒவ்வொரு ஓவரிலும் ஒரு வீரரை வீழ்த்தினார் ஷ்ரேயாஸ் கோபால்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இரு அணிகளுமே முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியதால், முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, ஆர்சிபியை பேட்டிங் செய்ய பணித்தார். 

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, பார்த்திவ் படேலின் பொறுப்பான அரைசதம் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் - மொயின் அலியின் அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் என்ற இலக்கை அவசரப்படாமல் நிதானமாக அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் அணி.

இந்த போட்டியில் ஆர்சிபி அணியிடமிருந்து ஷ்ரேயாஸ் கோபால் தான் ஆட்டத்தை பறித்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி நன்றாகவே தொடங்கியது. ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும் பார்த்திவ் படேலும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கினர். விராட் கோலி சற்று மந்தமாக ஆடினாலும் பார்த்திவ் படேல் அடித்து ஆடினார். பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்தனர். 7வது ஓவரில் கோலி - பார்த்திவ் ஜோடியை ஷ்ரேயாஸ் கோபால் பிரித்தார். 

ரிஸ்ட் ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபாலின் பந்தில் கோலி கிளீன் போல்டானார். ஷ்ரேயாஸ் தனது அடுத்த ஓவரில் டிவில்லியர்ஸையும் அதற்கடுத்த ஓவரில் ஹெட்மயரையும் வீழ்த்தினார். தனது முதல் மூன்று ஓவர்களிலும் ஒவ்வொரு ஓவரிலும் ஒரு வீரரை வீழ்த்தினார் ஷ்ரேயாஸ் கோபால். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த ஓவர்களில் மற்ற வீரர்களும் அடித்து ஆடவில்லை. 

8 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 71 ரன்களை எடுத்திருந்தது. 9வது ஓவரில் ரன்னே கொடுக்காமல் டிவில்லியர்ஸை வீழ்த்தினார் ஷ்ரேயாஸ் கோபால். 10வது ஓவரில் வெறும் 2 ரன்கள். மீண்டும் 11வது ஓவரை வீசிய ஷ்ரேயாஸ் கோபால், ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹெட்மயரை வீழ்த்தினார். 12வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. 9,10,11,12 ஆகிய நான்கு ஓவர்களிலும் சேர்த்து வெறும் 9 ரன்கள் மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது ஆர்சிபி அணி. இந்த ஓவர்கள் தான் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்த உதவின. இந்த ஓவர்களில் தான் ஆர்சிபி அணியின் ரன்ரேட் வெகுவாக குறைந்ததோடு ஆட்டத்திலிருந்து அப்பாற்பட்டு சென்றது. அதன்பின்னர் கடுமையாக போராடி 158 ரன்களை எடுத்தது. மிகவும் கடினமில்லாத அந்த இலக்கை ராஜஸ்தான் அணி எட்டி வெற்றி பெற்றது. 

ரஹானே கேட்ச்சை ஆரம்பத்திலேயே கோலி தவறவிட்டார். ஆட்டம் முடிவை நோக்கி செல்லும்போது முக்கியமான நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேட்ச்சை உமேஷ் யாதவ் ஒரு கேட்ச்சை தவறவிட்டார். இது போதாதென்று மொயின் அலியும் தன் பங்கிற்கு ஒரு கேட்ச்சை விட்டார். இவ்வாறு 3 கேட்ச்களை ஆர்சிபி அணி தவறவிட்டது. 

முதல் 3 போட்டிகளில் தோற்றிருந்தாலும், நான்காவது போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு இந்த போட்டியிலும் ஏமாற்றமே மிஞ்சியது. 

போட்டிக்கு பின்னர் பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி, 15-20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். மார்கஸ் ஸ்டோய்னிஸும் மொயின் அலியும் இணைந்து கடைசி நேரத்தில் அடித்து ஆடி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். இன்னும் 15 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. இந்த போட்டியில் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். ஏராளமான கேட்ச்களை தவறவிட்டோம். எனினும் இன்னும் 10 போட்டிகள் உள்ளன. அந்த போட்டிகளில் சிறப்பாக ஆடி பிளே ஆஃபிற்கு தகுதி பெற முனைவோம். மும்பை அணிக்கு எதிராகவும் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினோம் என்று கோலி தெரிவித்தார்.