வெற்றி முனைப்புடன் இந்த சீசனை தொடங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கமே தோல்வி முகமாக அமைந்துவிட்டது. கடந்த சீசன் மோசம் என்றால், இந்த சீசன் அதைவிட மோசமாக அமைந்துள்ளது.
ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது.
வெற்றி முனைப்புடன் இந்த சீசனை தொடங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கமே தோல்வி முகமாக அமைந்துவிட்டது. கடந்த சீசன் மோசம் என்றால், இந்த சீசன் அதைவிட மோசமாக அமைந்துள்ளது.
முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்த ஆர்சிபி, இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டஃப் கொடுத்தது. எனினும் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த சீசனில் முதல் வெற்றியை பெறும் நோக்கில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது. முதல் நான்கு போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இனிமேல் இதிலிருந்து மீண்டெழுந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை மட்டுமே சார்ந்திருப்பதே அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும் பவுலிங் மிக மோசமாக உள்ளது. ஒரு அணியாக சிறப்பாக செயல்பட தவறுகிறது ஆர்சிபி அணி. இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் மற்ற அணிகளுடன் போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஹெட்மயர், ஒரு போட்டியில் கூட சோபிக்கவில்லை. நான்கு போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிவிட்டார்.
பார்த்திவ் படேல் மட்டுமே நன்றாக ஆடிவருகிறார். விராட் கோலி 4 போட்டிகளில் ஆடி வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டிவில்லியர்ஸும் சொதப்பிவருகிறார். ஒட்டுமொத்தமாக ஓர் அணியாக தொடர்ந்து சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது ஆர்சிபி.
முதல் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், எஞ்சியுள்ள 10 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார் கேப்டன் விராட் கோலி.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி, இனிவரும் 10 போட்டிகளிலும் சிறப்பாக ஆடுவது குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் இனிவரும் போட்டிகளில் ஃப்ரெஷ்ஷாக சில வீரர்களை இறக்க உள்ளதாகவும் அவர்கள் அணிக்காக வெற்றிகளை தேடித்தருவார்கள் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
எனவே இனிவரும் போட்டிகளில் ஆர்சிபி அணியில் அதிரடியான சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
