ஐபிஎல் 13வது சீசனில், மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதிய போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே ஃபின்ச் அதிரடியாக ஆட, மறுமுனையில் படிக்கல் நிதானமாக ஆடினார். அதிரடியாக ஆடிய ஃபின்ச், அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, சரியான தொடக்கம் கிடைக்காமல் திணறினார். எந்த ஷாட்டுமே அவருக்கு சரியாக கனெக்ட் ஆகவில்லை. 11 பந்தில் வெறும் 3 ரன்களுக்கு நடையை கட்டினார் கோலி. அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்லுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.

நிதானமாக ஆடி 30 பந்தில் கிட்டத்தட்ட அதே அளவிற்கான ரன்கள் அடித்திருந்த படிக்கல், பதினைந்து ஓவருக்கு மேல் அடித்து ஆட தொடங்கினார். அதிரடியாக ஆடி ஒருசில சிக்ஸர்களை பறக்கவிட்ட படிக்கல், அரைசதம் அடித்து 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பும்ரா வீசிய 17வது ஓவர் மற்றும் 19வது ஓவரில் டிவில்லியர்ஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஷிவம் துபேவும் சிக்ஸர்களை விளாசினார். பாட்டின்சன் வீசிய கடைசி ஓவரில் துபே 3 சிக்ஸர்களை விளாச, 20 ஓவரில் ஆர்சிபி அணி 201 ரன்களை அடித்தது ஆர்சிபி அணி. டிவில்லியர்ஸ் 24 பந்தில் தலா 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 55 ரன்களை அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். துபே 10 பந்தில் 27 ரன்கள் அடித்தார்.

202 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா வெறும் 8 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 3 ஓவர்களை வாஷிங்டன் சுந்தர் அருமையாக வீசினார். அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாக, டி காக்கும் 14 ரன்களில் நடையை கட்டினார். 

இன்னிங்ஸின் 3வது ஓவரிலேயே களத்திற்கு வந்த இஷான் கிஷான், முதல் பந்திலிருந்தே அடித்து ஆட தொடங்கினார். ஹர்திக் பாண்டியா பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்த்தால், அவரும் வெறும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இஷான் கிஷானுடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். 16 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 122 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

கடைசி 4 ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 80 ரன்கள் தேவைப்பட்டது. ஆடம் ஸாம்பா வீசிய 17வது ஓவரில் பொல்லார்டு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 27 ரன்களை விளாசினார். சாஹல் வீசிய அடுத்த ஓவரில் பொல்லார்டு 2 சிக்ஸர்களுடன் இஷான் கிஷான் ஒரு சிக்ஸரும் என அந்த ஓவரில் 22 ரன்கள் அடிக்கப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் சைனி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை உடானா வீச, முதல் 2 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. அடுத்த 2 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசிய இஷான் கிஷான், ஐந்தாவது பந்தில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.  கடைசி பந்தில் மும்பையின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பொல்லார்டு பவுண்டரி அடித்ததால், போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

சூப்பர் ஓவரில் மும்பை அணியின் சார்பில் பொல்லார்டும் ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினர். சைனி அந்த ஓவரை அருமையாக வீசி, வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சூப்பர் ஓவரில் 8 ரன்கள் என்ற இலக்கை விரட்ட டிவில்லியர்ஸூம் கோலியும் வந்தனர். முதல் 3 பந்தில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் பும்ரா. நான்காவது பந்தில் டிவில்லியர்ஸின் பேட்டில் பட்டும் எட்ஜ் ஆகி ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரி கிடைத்தது. எனவே கடைசி 2 பந்தில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் அதை எளிதாக அடித்து ஆர்சிபி வெற்றி பெற்றது.