சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்தது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே பவுலர்கள் தொடக்கத்தில் மிக அருமையாக பந்துவீசினர். தீபக் சாஹர் 3வது ஓவரிலேயே ஃபின்ச்சை 2 ரன்னில் வீழ்த்தினார். அதற்கடுத்த ஓவரிலேயே ரன்னே அடிக்காமல் டிவில்லியர்ஸ் அவுட்டாக, அதன்பின்னர் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல்லும் 33 ரன்களில் அவுட்டானார்.

இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். வாஷிங்டன் சுந்தருக்கு நன்றாக பேட்டிங் ஆட கிடைத்த வாய்ப்பு இது. ஒரு சிக்ஸருடன் 10 ரன்களை அடித்து சுந்தர் அவுட்டாக, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய விராட் கோலி, டெத் ஓவர்களில் தெறிக்கவிட்டார்.

16  ஓவரில் தான் 100 ரன்களை எட்டிய ஆர்சிபி அணி, அந்த ஓவர் முடிவில் வெறும் 103 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. கடைசி 4 ஓவர்களில் விராட் கோலி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசியதுடன், பந்துகளை வீணடிக்காமல் 2 ரன்களாக ஓடினார். அதனால் 20 ஓவரில் 169 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

விராட் கோலி 52 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 90 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஷிவம் துபே 22 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 170 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின், முக்கியமான மற்றும் அந்த அணி அதிகம் சார்ந்திருக்கும் தொடக்க வீரர்கள் டுப்ளெசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவரையும் பவர்ப்ளேயில் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.

5.4 ஓவரில் வெறும் 25 ரன்களுக்கு வாட்சன், டுப்ளெசிஸ் ஆகிய 2 முக்கியமான விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அதன்பின்னர் ராயுடு மற்றும் ஜெகதீஷன் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் மிடில் ஓவர்களில் தொடர்ச்சியாக சிங்கிள் ரொடேட் செய்தும், அவ்வப்போது பவுண்டரியும் அடித்து ஆடாததால் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜெகதீஷன் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தோனி 10 ரன்களிலும் சாம் கரன் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, அவர்களை தொடர்ந்து ராயுடுவும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனி, சாம் கரன் ஆட்டமிழந்த பிறகே, போட்டி ஆர்சிபி பக்கம் திரும்பியது. கடைசி 3 ஓவர்களில் அறுபது ரன்கள் தேவைப்பட்டதால், ஆர்சிபி அந்த இடத்திலேயே வென்றுவிட்டது. அதன்பின்னர் ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் தலா 7 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் சிஎஸ்கேவால் 132 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, புள்ளி பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது.