ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த சீசனில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் மிகச்சிறந்த பரபரப்பான போட்டியாக அமைந்தது.
ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த சீசனில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் மிகச்சிறந்த பரபரப்பான போட்டியாக அமைந்தது.
காயம் காரணமாக ரோஹித் சர்மா ஆடாததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, 197 ரன்களை குவித்தது. 198 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு தனி ஒருவனாக களத்தில் நின்று அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
198 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் குயிண்டன் டி காக், ரோஹித்துக்கு பதில் களமிறங்கிய சித்தேஷ் லத், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் என யாருமே சோபிக்கவில்லை. 12 ஓவருக்கு 94 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் இஷான் கிஷானுக்கு முன்னதாகவே பொல்லார்டு களத்திற்கு வந்துவிட்டார். இஷான் கிஷான் விக்கெட்டுக்கு பிறகு பொல்லார்டுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். எனினும் ஹர்திக் 19 ரன்களில் வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த நம்பிக்கையாக பொல்லார்டு மட்டுமே இருந்தார். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல், சிக்ஸர்களாக விளாசி மிரட்டினார் பொல்லார்டு.

கடைசி 3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. மறுமுனையில் அல்ஸாரி ஜோசப் நின்றார். அல்ஸாரிக்கு பெரிதாக டென்சனை கொடுக்காமல் பொறுமை காத்த பொல்லார்டு, தான் பேட்டிங் முனைக்கு செல்லும்போதெல்லாம் சிக்ஸர் மழை பொழிந்தார். மிகுந்த தன்னம்பிக்கையுடன் கொஞ்சம் கூட டென்சன் ஆகாமல் தெளிவாக அடித்து ஆடினார் பொல்லார்டு.
கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷமி வீசிய 18வது ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. சாம் கரன் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் குவித்தார் பொல்லார்டு. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

மிகவும் நெருக்கடியான சூழலில் கடைசி ஓவரை வீசிய அன்கித் ராஜ்பூத், முதல் பந்தை வீச ஓடிவந்து பந்தை வீசாமல் பொல்லார்டை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றார். இக்கட்டான சூழலில் ஆதிக்கம் செலுத்தி ஆடிவரும் பேட்ஸ்மேனை கடுப்பாக்கும் வகையிலும் டென்சனாக்கும் வகையிலும் சில பவுலர்கள் இப்படி செய்வதுண்டு. அதைத்தான் ராஜ்பூத்தும் செய்தார். ஆனால் அதற்கேற்றவாறு பந்தையும் நன்றாக வீசியிருக்க வேண்டும். அதைவிடுத்து முதல் பந்தை வீசாமல் ஏமாற்றிவிட்டு சென்ற ராஜ்பூத், மீண்டும் ஓடிவந்து முதல் பந்தை நோ பாலாக வீசினார். அந்த பந்தில் சிக்ஸர் அடித்தார் பொல்லார்டு. ஃப்ரீஹிட்டில் பவுண்டரி அடிக்க, முதல் பந்திலேயே 11 ரன்கள் குவிக்கப்பட்டது. அந்த நோ பாலும் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதன்பின்னர் பொல்லார்டை அவுட்டாக்கினாலும் பஞ்சாப்பால் வெற்றி பெற முடியவில்லை. ஏனென்றால் முதல் பந்திலேயே வெற்றியை உறுதியாக்கிவிட்டுத்தான் சென்றார் பொல்லார்டு.
கடைசி நேரத்தில் ஒழுங்கா பந்துவீச தெரியல.. இதுல ராஜ்பூத்துக்கு சீன் வேற.. முதல்ல பந்த ஒழுங்கா போடுங்க தம்பி.. அப்புறமா சீன் போடலாம்.
