ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸூம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவருமே நல்ல ஃபார்மில் இருந்ததால், அருமையாக தொடங்கினர். பக்கா பிளானுடன் வந்த ராகுலும் மயன்க் அகர்வாலும் அதை சிறப்பாக செயல்படுத்தினர். மயன்க் அகர்வால் தொடக்கம் முதலே அடித்து ஆட, மறுமுனையில் ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, கொஞ்சம் நிதானமாக ஆடினார்.

அதிரடியாக ஆடிய மயன்க் அகர்வால், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ஜோஃப்ரா ஆர்ச்சர், ராஜ்பூத்,  டாம் கரன் ஆகீயோரின் ஃபாஸ்ட் பவுலிங்கையும் ஷ்ரேயாஸ் கோபால், டெவாட்டியா ஆகியோரின் ஸ்பின்னையும் என பாரபட்சமே பார்க்காமல் அடித்து ஆடி வெறும் 45  பந்தில் சதமடித்தார்.

மறுமுனையில் ராகுலும் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கே இருவரும் இணைந்து 16.3 ஓவரில் 183 ரன்களை குவித்தனர். சதமடித்து தனது கடமையை செவ்வனே செய்த மயன்க் அகர்வால், 50 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 106 ரன்களை குவித்து டாம் கரனின் பந்தில் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வால் அடித்த இந்த சதம் தான், ஐபிஎல்லில் இந்திய வீரர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதம் ஆகும்.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்ட மயன்க் அகர்வால் அவுட்டானதும், அடுத்த ஓவரில் ராகுல் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் இருவரும் பஞ்சாப் அணிக்கு தங்களது பணியை கொஞ்சம் அதிகமாகவே செய்து கொடுத்துவிட்டு சென்றனர். 

டெத் ஓவர்களில் பூரான் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 223 ரன்களை குவித்து 224 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது,

224 ரன்கள் மிகக்கடினமான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லரும் ஸ்டீவ் ஸ்மித்தும் களத்திற்கு வந்தனர். பட்லர் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

அதன்பின்னர் கேப்டன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், கடந்த போட்டியில் ஆடியதை போலவே அதிரடியாக ஆடி சிக்ஸர்களை விளாசினார். ஸ்மித்தும் சஞ்சு சாம்சனும் பவர்ப்ளேயில் பஞ்சாப்பின் பவுலிங்கை பறக்கவிட்டனர். அதிரடியாக ஆடி 26 பந்தில் அரைசதம் விளாசிய ஸ்மித், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

யாருமே எதிர்பார்த்திராத விதமாக அதன்பின்னர் ராகுல் டெவாட்டியா களத்திற்கு வந்தார். களத்திற்கு வந்ததும் கடுமையாக திணறிய ராகுல் டெவாட்டியா, ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ளமுடியாமல் மந்தமாக ஆடினார். அதனால் மறுமுனையில் பேட்டிங் ஆடிய சாம்சனின் மீது அழுத்தம் அதிகரித்தது. 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சிக்ஸர்களை பறக்கவிட்டு கொண்டிருந்த சாம்சன், ஒரு கட்டத்தில் ராகுல் டெவாட்டியாவை நம்பி சிங்கிள் கூட எடுக்க முன்வரவில்லை. அழுத்தம் அதிகரித்ததால், எல்லா பந்தையும் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில், ஷமி வீசிய 17வது ஓவரின் முதல் பந்தில் சாம்சன் ஆட்டமிழந்தார். 42 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

17 ஓவரில் 173 ரன்கள் அடித்திருந்த ராஜஸ்தான் அணிக்கு, கடைசி 3 ஓவரில் 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 20 பந்துகளுக்கும் மேலாக கடுமையாக திணறிய ராகுல் டெவாட்டியா, கோட்ரெல் வீசிய 18வது ஓவரில் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பினார். கோட்ரெல் வீசிய 18வது ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை புரட்டிப்போட்டார். 19வது ஓவரின் முதல் பந்தில் ஷமியின் பந்தில் உத்தப்பா ஆட்டமிழக்க, ஷமியின் அடுத்த 2 பந்துகளையும் ஆர்ச்சர் சிக்ஸர் விளாசிவிட்டு, அடுத்த பந்தில் சிங்கிள் எடுக்க, அதற்கடுத்த பந்தை டெவாட்டியா சிக்ஸர் விளாசினார். 19வது ஓவரிலேயே முடிந்திருக்க போட்டி, கடைசி பந்தில் டெவாட்டியா ஆட்டமிழந்ததால், கடைசி ஓவர் வரை போட்டி போனது. ஆனாலும் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. டாம் கரன் பவுண்டரி அடித்ததையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக விரட்டப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் 2008ல் டெக்கான் சார்ஜர்ஸ் நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டியதே சாதனையாக இருந்தது. தங்களது முந்தைய சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே முறியடித்துள்ளது.