ஐபிஎல் 13வது சீசனின் புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் ராகுலும் கெய்லும் இணைந்து அபாரமாக ஆடினர். கெய்ல் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் சிக்ஸர்களை விளாச, மறுமுனையில் ராகுல் சிக்ஸர்களை விளாசினாலும், கெய்ல் அடித்து ஆடியதால், அவருக்கு சிங்கிள் எடுத்து கொடுத்து ஆடினார்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கெய்ல், தனது அதிரடியை தொடர, ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 14 ஓவரில் 120 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த பூரான், 10 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று சிக்ஸர்களை விளாசிக்கொண்டிருந்த கெய்ல், 99 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

63 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்தார் கெய்ல். இந்த போட்டியில் அடித்த சிக்ஸர்களின் மூலம், டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் கெய்ல். கெய்லின் அதிரடியால் 20 ஓவரில் 185 ரன்களை குவித்த பஞ்சாப் அணி, 186 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்தது.

186  ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் மிக அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடிய ஸ்டோக்ஸ், 24 பந்தில் அரைசதம் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் அறுபதாக இருந்தபோது, அதில் ஐம்பது ரன்களை ஸ்டோக்ஸ் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

உத்தப்பா தன் பங்கிற்கு 23 பந்தில் 30 ரன்கள் அடிக்க, ஸ்டோக்ஸ் அமைத்து கொடுத்த பாதையில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 25 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் விளாசினார். 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ரன் அவுட்டானார். ஸ்டோக்ஸ், சாம்சனின் அதிரடியால் 10 ரன்ரேட்டை மெயிண்டன் செய்த ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் என்பது எளிதாகிவிட்டது. ஸ்மித்தும் பட்லரும் இணைந்து 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை முடித்துவிட்டனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் ஆகிய 3 அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் முறையே, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. எனவே பிளே ஆஃப் வாய்ப்பு இந்த அணிகளுக்கும் சன்ரைசர்ஸுக்கும் இன்னும் ஓபனாகவே உள்ளது.