ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெறுவது உறுதியாகிவிட்டது. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதற்கு கேகேஆர், பஞ்சாப், டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் வெறும் 2 வெற்றிகளுடன் கடைசி 2 இடங்களில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடக்கிறது. 

ராஜஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன்  கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று மும்பை இந்தியன்ஸை அந்த அணி எதிர்கொள்ளும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் தடையில் இருந்ததால் கடந்த சீசனில் அவர் ஆடவில்லை. அதனால் கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானே, கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் அணியை பிளே ஆஃபிற்கு முன்னேற்றினார். பிளே ஆஃப் சுற்றில் தோற்று ராஜஸ்தான் அணி வெளியேறியது.

இந்த சீசனில் ஸ்மித் மீண்டும் அணியில் இணைந்தபோதும் ரஹானே தான் கேப்டனாக செயல்பட்டு வந்தார். தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் ராஜஸ்தான் அணி, புதிய உத்வேகத்துடன் வெகுண்டெழும் முனைப்பில் ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளதாக அந்த அணி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.