உள்நாட்டு இளம் திறமைகளை கண்டறிவதற்காகவும், அதேவேளையில் பொழுதுபோக்கு நோக்கத்திலும் தொடங்கப்பட்டது ஐபிஎல். 2008லிருந்து இதுவரை 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. ஐபிஎல்லின் மூலமாக ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற பல அபாரமான இளம் திறமைகள் அடையாளம் காணப்பட்டு இந்திய அணியில் அசத்திவருகின்றனர்.

நடந்து முடிந்த 13வது சீசனிலும் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, நடராஜன், இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் அபாரமாக ஆடி அசத்தினர். 

இன்னும் ஏராளமான இளம் திறமைசாலிகள் வாய்ப்பு கிடைக்காமல் பென்ச்சில் உட்கார்ந்திருக்கின்றனர். எனவே மேலும் நிறைய இளம் திறமைசாலிகளை அடையாளம் காணும் விதமாகவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும், 9வது ஐபிஎல் அணியை அடுத்த சீசனில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

பிசிசிஐ அப்படியொரு முயற்சி செய்யும்பட்சத்தில் அதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார் ராகுல் டிராவிட். இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் வீரரும், அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக ஏராளமான இளம் திறமைகளை இந்திய கிரிக்கெட்டுக்கு உருவாக்கி கொடுத்தவரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தற்போதைய தலைவருமான ராகுல் டிராவிட், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதன் அடிப்படையில், 9வது ஐபிஎல் அணியை சேர்க்கும் முயற்சிக்கு ஆதரவளிப்பதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், திறமைசாலிகளுக்கு கூடுதல் வாய்ப்பை உருவாக்கும் விதமாக, விரிவாக்கத்திற்கு நாம் தயாராகிவிட்டோம். அண்டர் 19 வீரர்கள் அபாரமாக ஆடுவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உள்நாட்டு போட்டிகளில் தங்களது மாநில அணிகளுக்காக மட்டுமல்லாது ஐபிஎல்லிலும் அருமையாக ஆடுகின்றனர். ஆனால் இன்னும் நிறைய திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

நிறைய அணிகளில் திறமையான இளம் வீரர்கள் பலர் ஆட வாய்ப்பு கிடைக்காமல் பென்ச்சில் உட்கார்ந்திருக்கின்றனர். கிரிக்கெட்டின் தரம் உயர்ந்ததால் தான் இந்த நிலை என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.