ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன. இந்நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள 3 அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடள்ஸ் அணியில் இந்த சீசனில் முதல் முறையாக ஆடவுள்ள ரஹானே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு மாறியது குறித்து ரஹானே மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரஹானே, மிகச்சிறந்த பேட்ஸ்மேன். டெக்னிக்கலாக வலுவான பேட்ஸ்மேன் ரஹானே. ஐபிஎல்லில் 2011 முதல் 2015 வரை மற்றும் 2018-2019 என மொத்தம் 7 சீசன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடியுள்ளார் ரஹானே. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் ஆடிய வீரர் மற்றும் அந்த அணியில் அதிகமான ரன்களை குவித்த வீரர் ரஹானே தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடியதில் மட்டும் 2,810 ரன்களை குவித்துள்ளார் ரஹானே.  அந்த அணிக்காக ஆடிய 122.65 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 24 போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்தியும் உள்ளார் ரஹானே.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்த ரஹானே, அந்த அணியிலிருந்து டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இந்த சீசனில் முதல்முறையாக டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடவுள்ளார். இந்நிலையில், அணி மாறியதற்கான காரணம் குறித்து ஸ்போர்ட்ஸ் டாக்கிற்கு அளித்த பேட்டியில் ரஹானே மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ரஹானே, டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடவுள்ளது உற்சாகமளிக்கிறது. நான் கடந்த ஆண்டு கவுண்டியில் ஆடியபோது ஹாம்ப்ஷைரில் இருந்தேன். அப்போது உலக கோப்பை கவரேஜுக்காக இங்கிலாந்து வந்திருந்த கங்குலி, என்னை டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு வருவது குறித்து யோசிக்குமாறு சொன்னார். நன்றாக நேரம் எடுத்து யோசித்து சொல்லுமாறு கூறினார்.

நான் எனக்கான நேரத்தை எடுத்து, இதுகுறித்து யோசித்தேன். கங்குலி மற்றும் பாண்டிங்கின் வழிகாட்டுதலில் ஆடுவது, ஒரு வீரராக எனது வளர்ச்சிக்கு உதவும் என்று நினைத்தேன். அதனால் மாறிவிட்டேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எனக்கு மிகச்சிறந்த வாய்ப்பையளித்தது என்று அந்த அணியையும் நினைவுகூர்ந்துள்ளார் ரஹானே.