ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய மூன்று அணிகளில் ஆர்சிபியை தவிர மற்ற இரண்டு அணிகளும் நன்றாகவே ஆடிவருகின்றன. 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனில் நன்றாக ஆடிவருகின்றன. பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், கேப்டன்சியில் அசத்திவருகிறார். களவியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை பயன்படுத்தும் மற்றும் கையாளும் விதம், நெருக்கடியான சூழலில் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் என கேப்டன்சியில் மிரட்டுகிறார். 

பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் நன்றாக ஆடி, ஒரு கேப்டனாக மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். கடந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறாத பஞ்சாப் அணிக்கு, இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது. 

நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் அடித்தது. 164 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் எட்டி டெல்லி அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டததற்காக பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வினுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி இந்த சீசனில் முதன்முறையாக பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 12 லட்சம் ரூபாய் அபராதத்துடன் முடிந்துவிட்டது. இது மீண்டும் நடந்தால், ஒட்டுமொத்த அணிக்கும் கடும் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது கேப்டனுக்கு அல்லது சில போட்டிகளில் ஆட தடை கூட விதிக்கப்படலாம்.