ஐபிஎல் 12வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோதுகின்றன. 

மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் கடந்த சீசனில் இறுதி போட்டிவரை சென்ற சன்ரைசர்ஸ் அணியும் கேகேஆர் அணியும் மோதுகின்றன. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் ஓராண்டு தடையில் இருந்ததால், கடந்த சீசனில் ஆடவில்லை. அவர்தான் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அவர் கடந்த சீசனில் ஆடாததால் கேன் வில்லியம்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 

நியூசிலாந்து அணியின் கேப்டனான வில்லியம்சன், தனது அபாரமான கேப்டன்சியால் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்ததோடு சன்ரைசர்ஸ் அணியை இறுதி போட்டிவரை அழைத்து சென்றார். வில்லியம்சனின் கேப்டன்சி அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இந்த சீசனிற்கு தடை முடிந்து வார்னர் திரும்பிவிட்ட நிலையிலும் வில்லியம்சன் தான் கேப்டனாக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் காயம் காரணமாக வில்லியம்சன் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. அதனால் இன்றைய போட்டியில் அவர் ஆடமாட்டார். துணை கேப்டன் புவனேஷ்வர் குமாரின் தலைமையில் தான் அந்த அணி களமிறங்க உள்ளது. இதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி உறுதிப்படுத்தியுள்ளார். 

வில்லியம்சன் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவுதான் என்றாலும் புவனேஷ்வர் குமாரின் தலைமையில் வார்னர், விஜய் சங்கர், யூசுப் பதான், ரஷீத் கான், சஹா ஆகிய சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர். வில்லியம்சனின் கேப்டன்சி இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவுதான். எனினும் புவனேஷ்வர் குமாரின் கேப்டன்சி திறமையை காண இது ஒரு வாய்ப்பு.

வார்னர், ஷாகிப் அல் ஹாசன், ரஷீத் கான், முகமது நபி ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. சஹா, விஜய் சங்கர், மனீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா ஆகியோரும் களமிறங்க வாய்ப்புள்ளது. புவனேஷ்வர் குமாருடன் சித்தார்த் கவுல் அல்லது கலீல் அகமது ஆகிய இருவரில் ஒருவர் வேகப்பந்து வீச்சாளராக களமிறக்கப்படலாம். 

ஆஃப்கானிஸ்தான் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக முகமது நபி திகழும் நிலையில், அவர் இன்றைய போட்டியில் ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச சன்ரைசர்ஸ் அணி:

வார்னர், சஹா(விக்கெட் கீப்பர்), ஷாகிப் அல் ஹாசன், விஜய் சங்கர், மனீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா, ரஷீத் கான், முகமது நபி, புவனேஷ்வர் குமார்(கேப்டன்), சித்தார்த் கவுல்/கலீல் அகமது.