ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் நடக்கும். அந்த வகையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன.

மூன்று முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் முதன்முறையாக கோப்பையை வெல்ல முனையும் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை பெற்றுள்ளன. 

ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப் அணி, கேகேஆரிடம் தோற்றது. டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபியை வீழ்த்தியது. இரு அணிகளுமே இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இன்று மோதுகின்றன. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் குயிண்டன் டி காக் நல்ல ஃபார்மில் உள்ளார். அதேபோல சூர்யகுமார் யாதவும் நன்றாக ஆடிவருகிறார். இந்த சீசனில் யுவராஜ் சிங் மீண்டெழுந்துள்ளார். ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா என பின்வரிசை வீரர்களும் வலுவாகவே உள்ளனர். பும்ராவுடன் மலிங்கா இணைந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

இன்றைய போட்டியில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணிதான் ஆட வாய்ப்புள்ளது. 

பஞ்சாப்புக்கு எதிரான போட்டிக்கான உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, மயன்க் மார்கண்டே, மெக்லநெகன், பும்ரா, மலிங்கா.