ஐபிஎல் 12வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோதுகின்றன. 

மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் கடந்த சீசனில் இறுதி போட்டிவரை சென்ற சன்ரைசர்ஸ் அணியும் கேகேஆர் அணியும் மோதுகின்றன. உலக கோப்பை அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த ஐபிஎல் மிக முக்கியமானது. 

கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்று வரை கேகேஆர் அணி முன்னேறியது. இறுதி போட்டிக்கு முந்தைய போட்டி வரை கேகேஆர் அணி ஆடியது. கேகேஆர் அணியில் இளம் திறமைகள் பலர் உள்ளனர். இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆடாதது, கேகேஆர் அணிக்கு பலம். அதேநேரத்தில் அதிரடி வீரர் வார்னர் அணிக்கு திரும்பியுள்ளார். எனினும் வில்லியம்சனின் கேப்டன்சியை அந்த அணி மிஸ் செய்வதை கேகேஆர் அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

கேகேஆர் அணியில் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் லின், கேகேஆர் அணியின் நட்சத்திர வெளிநாட்டு வீரர் சுனில் நரைன், ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் மற்றும் பிராத்வைட் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் அணியில் எடுக்கப்படலாம். அதேபோல இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் ஷிவம் மாவி மற்றும் நாகர்கோடி ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக இருப்பர். இவர்கள் தவிர இளம் வீரர் ஷுப்மன் கில், துணை கேப்டன் உத்தப்பா, குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோரும் அணியில் இருப்பார்கள். 

உத்தேச கேகேஆர் அணி:

கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், பிராத்வைட், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, ஷிவம் மாவி, நாகர்கோடி.