ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ரபாடா ஆகிய இளம் வீரர்களை உள்ளடக்கிய துடிப்பான அணியாக உள்ளது. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத டெல்லி கேபிடள்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவருகின்றன. 

இந்த அணிகளில் டெல்லி கேபிடள்ஸ் அணிதான் இம்முறை கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு 2 முறை உலக கோப்பையை வென்று கொடுத்த மற்றும் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங், டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவர் மட்டும் போதாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அவரும் பாண்டிங்குடன் இணைந்து டெல்லி அணியை வழிநடத்திவருகிறார். 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ரபாடா ஆகிய இளம் வீரர்களை உள்ளடக்கிய துடிப்பான அணியாக உள்ளது. பாண்டிங் மற்றும் கங்குலி ஆகிய இருவருமே ரிஷப் பண்ட்டின் மீதும் அவரது திறமையின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் ரிஷப் பண்ட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டும்தான் மிரட்டலாக ஆடினார். அந்த போட்டியில் ரிஷப்பின் அதிரடியான பேட்டிங்கால்தான் மும்பை இந்தியன்ஸை டெல்லி அணி வீழ்த்தியது. அதுபோன்ற இன்னிங்ஸைத்தான் அவரிடமிருந்து டெல்லி அணி எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த போட்டியை தவிர அவர் மற்ற போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 

எனினும் அவர் மீது பாண்டிங்கும் கங்குலியும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ரிஷப் பண்ட் குறித்து பேசிய டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட் விரைவில் ரன்களை குவித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். அவரது மண்டையில் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் விளாசுவது மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் சிக்ஸர் அடிப்பதை தவிர வேறு எதைப்பற்றியுமே யோசிப்பதில்லை. அவரது ஆட்ட உத்தியை மாற்ற நான் விரும்பவில்லை. அவரை நிலைத்து நின்று ஆடுமாறு நான் ஒருபோதும் நான் கூறமாட்டேன். அவரது பேட்டிங் உத்தியை மாற்றக்கூடாது. அவரது அதிரடியான பேட்டிங்கை அவர் ஆடினால் டெல்லி அணி கண்டிப்பாக வெல்லும். அதிரடியாக ஆடும் அதேநேரத்தில் அவர் கடைசி 4 ஓவர்களில் களத்தில் இருப்பது அவசியம். அவர் கடைசி நான்கு ஓவர்களில் பேட்டிங் ஆட வேண்டும் என்பது அணியின் விருப்பம் மட்டுமல்லாமல் தேவை. அதை மட்டும் உணர்ந்து அவர் செயல்பட வேண்டும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.