ஐபிஎல் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது.
ஐபிஎல் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த போட்டியில் காயம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ரோஹித் சர்மா ஆடாததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டார். டாஸ் வென்ற பொல்லார்டு, பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கெய்லும் ராகுலும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 116 ரன்களை குவித்தனர். 36 பந்துகளில் 63 ரன்களை குவித்து கெய்ல் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கருண் நாயர், டேவிட் மில்லர், சாம் கரன் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிய கேஎல் ராகுல், சதமடித்து அசத்தினார். ராகுலின் அபாரமான பேட்டிங்கால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்களை குவித்தது.
198 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் குயிண்டன் டி காக், ரோஹித்துக்கு பதில் களமிறங்கிய சித்தேஷ் லத், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் என யாருமே சோபிக்கவில்லை. 12 ஓவருக்கு 94 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் இஷான் கிஷானுக்கு முன்னதாகவே பொல்லார்டு களத்திற்கு வந்துவிட்டார். இஷான் கிஷான் விக்கெட்டுக்கு பிறகு பொல்லார்டுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். எனினும் ஹர்திக் 19 ரன்களில் வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த நம்பிக்கையாக பொல்லார்டு மட்டுமே இருந்தார். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல், சிக்ஸர்களாக விளாசி மிரட்டினார் பொல்லார்டு.

கடைசி 3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. மறுமுனையில் அல்ஸாரி ஜோசப் நின்றார். அல்ஸாரிக்கு பெரிதாக டென்சனை கொடுக்காமல் பொறுமை காத்த பொல்லார்டு, தான் பேட்டிங் முனைக்கு செல்லும்போதெல்லாம் சிக்ஸர் மழை பொழிந்தார். கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷமி வீசிய 18வது ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. சாம் கரன் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் குவித்தார் பொல்லார்டு. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான சூழலில் கடைசி ஓவரை வீசிய ராஜ்பூத், முதல் பந்தை நோ பாலாக போட அந்த பந்தை சிக்ஸர் அடித்தார் பொல்லார்டு. சிக்ஸருடன் நோ பாலுக்கான ரன்னும் சேர்த்து 7 ரன்கள் கிடைத்தது. முதல் பந்தே வீசாமல் 7 ரன்களை கொடுத்தார் ராஜ்பூத். ஃப்ரீஹிட்டில் பவுண்டரி அடித்தார் பொல்லார்டு. இதையடுத்து 5 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற எளிய சூழல் உருவானபோது, பொல்லார்டு ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், அல்ஸாரியும் ராகுலும் இணைந்து அடுத்த மூன்று பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அல்ஸாரி அந்த பந்தை ஸ்டிரைட் திசையில் அடித்ததால் இரண்டு ரன்கள் ஓடி எடுக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
31 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 83 ரன்களை குவித்து, தனி ஒருவனாக மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார் பொல்லார்டு. ஆட்டநாயகன், கேம் சேஞ்சர், சூப்பர் ஸ்டிரைக்கர் ஆகிய விருதுகளை அள்ளினார் பொல்லார்டு.
இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
