ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. ஐபிஎல்லில் இதுவரை 3 முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனையும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. 

ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

ஆர்சிபிக்கு எதிரான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் எதிர்பாராத அளவிற்கு அந்த போட்டியில் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. பந்து பயங்கரமாக ஸ்பின் ஆனது. அதனால் அந்த போட்டியில் ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகிய மூவரும் இணைந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். அதேபோல வெறும் 71 ரன்களை எடுக்க, அதே ஸ்பின்னை வைத்து சிஎஸ்கே அணியை நாக்கு தள்ளவிட்டது ஆர்சிபி அணி. 

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டி டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. அந்த ஆடுகளமும் மிகவும் ஸ்லோவாக இருந்தது. எனினும் 148 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் எட்டி சிஎஸ்கே வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா ஆடுகளம் குறித்து பேசினார். பின்னர் ஃபீல்டிங்கில் சிஎஸ்கே அணி மிகச்சிறந்ததாக இல்லை எனவும் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார். 

டெல்லி அணியை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பவுலர்களை பாராட்டிய தோனி, தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் ஆட முடியாமல்போனது அணிக்கு பெரிய அடி என்று தெரிவித்தார். 

தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.